சிக்கன், மட்டன் பொரித்ததில் தீபம் ஏற்றும் எண்ணெய் தயாரிப்பு? பெயரளவிலேயே செயல்படுகிறது ரூகோ திட்டம்
கோவை: எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 'ரூகோ' திட்டம் தமிழகத்தில் பெயரளவில் மட்டும் உள்ளதால், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் சந்தையில் மலிவு விலையில் சமையலுக்கும், தீபம் ஏற்றும் எண்ணெய் ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சில உணவகங்களில் சிக்கன், மட்டன் பொரித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவுபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து இதயம், வயிறு சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் வரை ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால், 'ரூகோ' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த, 'அக்ரிகேட்டர்ஸ்' வாயிலாக, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உணவு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பயோடீசல் உற்பத்தியாளர்களுக்கு அனுப்பப்படுவதே ரூகோ திட்டம். தினமும், 50 லிட்டர் அதற்கு மேல் பயன்படுத்தும் ஹோட்டல், பேக்கரி, இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, ஒரு லிட்டர் 55 ரூபாய்க்கு அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர், கொள்முதல் செய்கிறார். ஆனால், அங்கீகாரம் இல்லாத சேகரிப்பாளர்கள் 72 - 78 ரூபாய் வரை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இது, சமையல் எண்ணெய் ஆகவும், தீபம் ஏற்றும் எண்ணெய் ஆகவும் மாற்றி மீண்டும் தமிழக சந்தைகளிலேயே விற்கப்படுகிறது. கோவை உணவு பாதுகாப்புத்துறையிலும் இதுபோன்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் இருந்து, எத்தனை லிட்டர் பயோ டீசல் தயார் செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரம், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இல்லை. ரூகோ திட்டம் மாநில அளவில் பெயரளவில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. பயோ டீசல் தயாரிக்கப்படுகிறதா?
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கோவையில் அங்கீகாரம் பெற்ற நான்கு அக்ரிகேட்டர்ஸ் உள்ளனர். இங்கு சேகரிக்கப்படும் எண்ணெய் தாராபுரம் பகுதியில் உள்ள பயோடீசல் உற்பத்தியாளருக்கும், கோவையில் உள்ள சோப்பு ஆயில் உற்பத்தியாளருக்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான பயன்படுத்தப்பட்ட எண்ணெய் அங்கீகாரம் இல்லாத சேகரிப்பாளர்கள் வாயிலாக, கர்நாடாகாவுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு, பயன்படுத்தப்பட்ட எண்ணெயை
மறுசுழற்சி செய்து மீண்டும் சந்தைக்கு அனுப்புகின்றனர்.
அதாவது, 10 டன் புதிய எண்ணெய் உடன், 5 டன் மறுசுழற்சி செய்த எண்ணெய் கலந்து குறைந்த விலைக்கு சமையல் எண்ணெய் ஆகவும், தீபம் ஏற்றும் எண்ணெய் ஆகவும் விற்பனை செய்கின்றனர்.
எண்ணெய் கொள்முதல் வரை மட்டுமே உணவு பாதுகாப்புத்துறை கவனிக்கிறது. அதன்பி ன்னர் பயோ டீசல் தயாரிக்கப்படுகிறதா, எத்தனை டன் தயாரிக்கின்றனர் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அதுசார்ந்த கண்காணிப்பும் சரியான வழிகாட்டுதல்களும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''கோவையில் 46.62 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கடந்த மாதம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுகள் போக, 80 சதவீதம் பயோ டீசலாக மாற்றப்படுகிறது. தவறு நடந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்றார்.