| ADDED : டிச 17, 2023 02:38 AM
சென்னை: ''வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம் நுால் உரையுடன் வெளியிடப்படும் இந்நாள் தமிழகப் பதிப்பு வரலாற்றில் மிக முக்கியமான நாள்,” என, சென்னையில் தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் நடந்த நுால்கள் வெளியீட்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசினார்.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியுள்ள 'புலவர் புராணம்' உரை மற்றும் அவரது கோவை, அந்தாதி ஆகியவை அடங்கிய ஆறு தொகுதிகள் என மொத்தம் ஏழு நுால்களை கோவை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் வெளியிட நீதிபதி ஆர்.மகாதேவன் பெற்றுக் கொண்டார்.குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில் பிறந்தவர். அவர் ஒரு லட்சம் கவிதைகளுக்கு மேல் எழுதியவர். முருகனிடம் கோபித்து அவரை வரவழைத்து பாடிய பாடல்களே பல்லாயிரம் உண்டு. தில்லை திருவாயிரம், திருவரங்கத்தாயிரம், பழநி திருவாயிரம், திருவிளக்காயிரம், கணபதியாயிரம், சக்தியாயிரம் என பல ஆயிரம் பாடல்களை எழுதினார். சமகாலத்தில் வாழ்ந்த வள்ளலாரை மூன்று முறை சந்தித்ததாக எழுதியுள்ள இவர், 'கொல்லாமை' உள்ளிட்ட கொள்கைகளால் ஒன்றுபட்டதையும் பதிவு செய்துள்ளார் என்றார்.நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: தண்டபாணி சுவாமிகள் ஒன்பது வயதில் வெண்பா பாடும் ஆற்றல் பெற்றவர். களப்பிரர்கள் ஆட்சியில் இரண்டாம் நுாற்றாண்டு முதல் ஆறாம் நுாற்றாண்டு வரை உலகின் உன்னத மொழியான தமிழ் தன் பெருமையை இழந்திருந்தது. ஏழாம் நுாற்றாண்டில்திருஞானசம்பந்தர் தோன்றி தமிழைக் காத்தார். அவரது தொடர்ச்சியாக 12 திருமுறைகள் உருவாகின. அந்த வரிசையில் பெரியபுராணத்தின் தொடர்ச்சியாக பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று தண்டபாணி சுவாமிகள் பாடிய பாடல்கள் தமிழைக் காத்தன.பக்தி பல நிலைகளை உடையது. பக்தன் ஒரு கடவுளை நம்புவது பக்தியின் முதல் நிலை. தான் நம்பும் கடவுளைப் போல பிற சமயக் கடவுள்களும் உள்ளனர் என உணர்வது இரண்டாவது நிலை; அது பக்குவ நிலை. நம் சமயத்தை தோற்றுவித்த இறைவனே எல்லா சமயங்களையும் தோற்றுவித்தான்; அவனே எல்லா பெயர்களிலும் உலகம் முழுக்க உள்ளான் என உணர்வது மூன்றாவது நிலை. அதாவது தன்னை அறிந்து தன்னிலிருந்து விலகுவது மூன்றாவது நிலை. அந்த சமயாதீத நிலையில் இருந்துதான் தண்டபாணி சுவாமிகள் உலகம் ஒன்றே எனும் சூத்திரத்துடன் பாடல்களை எழுதினார். சிறந்த புலவராக இருந்த தண்டபாணி சுவாமிகள் 72 புலவர்களின் வரலாற்றைத் திரட்டி தமிழ் உலகத்துக்கு தந்துள்ள நுால்தான் புலவர் புராணம் என்றார்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியரும், பதிப்பாசிரியருமான சதீஷ் பேசியதாவது: தமிழகத்தில் 19ம் நுாற்றாண்டில் நிலவிய காலனிய ஆதிக்கமும் அது உருவாக்கிய கல்வி முறையும் விவாதத்துக்கு உரியன. ஆங்கிலக் கல்வி முறை அரசு அலுவலகப் பணிகளை செய்வதற்குத் தேவையான திறன்களை அரசின் சார்பில் வளர்த்தது.அது கல்வியை பொதுமைப்படுத்தியது. காலனியத்துக்கு முன்பிருந்த கல்வி சமூகத் தேவைக்கான பாரம்பரியத்தின் நுட்பமான அறிவை வழங்குவதாக இருந்தது. அதனால் தான் ஆசிரியர்கள் போதகாசிரியர்களாக, தத்துவவாதிகளாக, மருத்துவம் செய்பவர்களாக, வருவதை உரைக்கும் திறன்களை பெற்றவர்களாக பன்முகத் தன்மையுடன் இருந்தனர். அதன் கடைசிக் கண்ணியாகத்தான் தண்டபாணி சுவாமிகள் இருந்தார் என்றார்.
தர்மும் தமிழும் வேறல்ல
“மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாக வெளியிடுவோம்” என 'தினமலர்' நாளிதழின் சென்னை பதிப்பு இணை ஆசிரியரும் 'தாமரை பிரதர்ஸ் மீடியா' நிறுவனத்தின் இயக்குனருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.அவர் பேசியதாவது: 'எப்போதெல்லாம் தர்மம் சிதைகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்' என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுவார்.அப்படி களப்பிரர் காலத்தில் சிதைந்த தமிழை ஞானசம்பந்தர் காத்தார். தெலுங்கின் ஆதிக்கத்தால் தமிழ் தாழ்ந்தபோது அருணகிரிநாதர் அவதரித்தார்.ஆங்கிலம் கை ஓங்கியபோது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவதரித்து தமிழைக் காத்தார். அதனால் தர்மும் தமிழும் வேறல்ல என்பது தெளிவாகிறது.அப்படிப்பட்ட தர்மம் சார்ந்த தெய்வீகம் சார்ந்த இந்த பதிப்புப் பணிக்கானவாய்ப்பை தமிழன்னை எங்களுக்கு வழங்கி இருக்கிறார். தண்டபாணி சுவாமிகளின் நுால்களைப் பதிப்பிப்பது எங்கள் பாக்கியம். அதன் பதிப்புப் பணி பேராசிரியர் அ.சதீஷ் தலைமையில் சிறப்புற நடந்து வருகிறது.இதற்கு ஆகும் மிகுந்த பொருட்செலவை முருக பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். எவ்வளவு செலவானாலும் தண்டபாணி சுவாமிகளின் அனைத்து படைப்புகளையும் பதிப்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.