மேலும் செய்திகள்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி வழங்குவதில் சிக்கல்
26 minutes ago
முதல் மண்டல மாநாட்டை வரும் 15ல் திருவண்ணாமலையில் நடத்த, தி.மு.க., இளைஞரணி திட்டமிட்டுள்ளது. தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'வெல்வோம் 200; படைப்போம் வரலாறு' என்ற கோஷத்தை முன்வைத்து, சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., இளைஞரணி தயாராகி வருகிறது. அதாவது, 234 தொகுதிகளில், 200ல், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக மண்டல பொறுப்பாளர்கள் எட்டு பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு, சட்டசபை தொகுதி வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகளையும், முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் த.வெ.க., போட்டியிடுவதாலும், அக்கட்சியில் இளைஞரணி பட்டாளம் அதிகமாக இருப்பதாலும், தேர்தல் பணிகளில் தி.மு.க.,வின் இளைஞரணி பங்களிப்பை அதிகரிக்க, துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி விரும்புகிறார்.எனவே, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, தேர்தல் பிரசார மண்டல மாநாடுகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, முதல் மண்டல மாநாடு, வரும் 15ல் திருவண்ணாமலையில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தேர்தல் பிரசார தீபத்தையும் திருவண்ணாமலையில் ஏற்ற, இளைஞரணி தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மண்டலங்களிலும் மாநாடுகள் நடத்தப்படஉள்ளன. பிப்., இறுதியில் கட்சி சார்பில் மண்டல மாநாடுகளை முடித்த பின், தி.மு.க.,வின் மாநில தேர்தல் மாநாடு, மார்ச் மாதத்தில் நடத்தப்படுகிறது. அதில், வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுஉள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -
26 minutes ago