உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கவர்னர், முதல்வர் மோதலுக்கு காரணம் மதுபான தொழிற்சாலை கோப்பா?

 கவர்னர், முதல்வர் மோதலுக்கு காரணம் மதுபான தொழிற்சாலை கோப்பா?

க வர்னர் - முதல்வர் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு மதுபான தொழிற்சாலை கோப்பு தான் காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையில் அரசு துறைகள் சம்பந்தமாக கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் பாஜ., கூட்டணியை விட்டு வெளியேறி த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாமா என எண்ணத்தில் முதல்வர் ரங்கசாமி இருப்பதாக என்.ஆர்.காங்., கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கவர்னர், முதல்வர் இடையே என்ன காரணத்தினால் மோதல் நீடிக்கிறது என்பது குறித்து பாஜ., தரப்பில் கூறப்படுவது; அரசு துறைகளில் 3,500 பணியிடங்கள் நிரப்பல், 10,000 பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்கல், இலவச அரிசி, தீபாவளி சிறப்பு தொகுப்பு, பல துறைகளில் பதவி உயர்வு என முதல்வர் ரங்கசாமி அறிவித்த அனைத்திற்கும் கவர்னர் கைலாஷ்நாதன் ஒத்துழைப்பை வழங்கினார். ஆனால், தீபாவளி பண்டிகைக்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் வழங்குவதற்கான முதல்வர் முடிவை கவர்னர் ஏற்கவில்லை. மேலும் மோதல் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படும் 7 மதுபான தொழிற்சாலைக்கான அனுமதிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மறுத்துவிட்டது தான் காரணம். புதுச்சேரியில் புதிதாக அமைக்க தயாரான 7 மதுபான தொழிற்சாலைகளுக்காக அமைச்சரவை (ஒரு சில அமைச்சர்கள் தவிர) அனுமதி வழங்கிய பின்னும், கவர்னர் அனுமதிக்க மறுப்பது முதல்வருக்கு கடும் நெருக்கடி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி பெற்றவர்களின் பின்னணியில் ஆளும்கட்சி என்.ஆர்.காங்., - பாஜ., மட்டுமன்றி எதிர்க்கட்சி பிரமுகர்களும் அடக்கம். மதுபான தொழிற்சாலை அனுமதி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், வெளியாகி விட்டால் தொழிற்சாலையை கொண்டு வந்து விடலாம் என, முதலீடு செய்தவர்கள் நினைக்கின்றனர். இல்லையென்றால் இந்த திட்டமே கைவிட்டு போகும் சூழ்நிலையும் உள்ளது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு இந்த மதுபான தொழிற்சாலை வேட்டு வைக்கும் என்பதால், இதற்கு அனுமதி தர மறுப்பதாக கவர்னர் தரப்பில் சிலர் கூறுகின்றனர். கவர்னருடன் நெருக்கமாக உள்ள சில பாஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை அனுமதி வழங்க விடாமல் தடுக்கின்றனர் என, என்.ஆர்.காங்., கட்சியினர் கூறுகின்றனர். இந்த அனுமதி மோதலால், கூட்டணி வேட்பாளர்கள் குறித்து பேச வந்த பாஜ., முக்கிய நிர்வாகிகளிடம் ஜனவரிக்கு மேல் பேசிக்கொள்ளலாம் என, கடுப்பேத்தி அனுப்பியதும், மேலும் கவர்னரை மாற்றக்கோரி டில்லி தலைமைக்கும் முதல்வர் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், என்னை மாற்றினாலும் கவலையில்லை. இதற்கு அனுமதி தர மாட்டேன் என, கவர்னர் தரப்பில் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என தெரியாமல் பெரிய தொகையை முதலீடு செய்தவர்களும், முறையாக 'கவனிக்க' பட்டவர்களும் துாக்கமின்றி தவித்து வருவதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கிண்டலடிக்கின்றனர். அனுமதி கிடைக்குமா, இல்லையா என தேர்தல் நெருக்கத்தில் தெரிந்து விடும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை