மேலும் செய்திகள்
3 பேரிடம் சைபர் கும்பல்: ரூ.12.50 லட்சம் மோசடி
30-Oct-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, செந்தாமரை நகர், குரு சித்தானந்த தெருவை சேர்ந்தவர் டேவிட் பென்னி, 37; பட்டதாரியான இவரை, கடந்த மே மாதம், நாவற்குளம், வசந்தப்புரத்தை சேர்ந்த அந்தோணி செந்தில்குமார், அவரது தாய் முனியம்மாள் ஆகியோர் அணுகி உள்ளனர். அப்போது, புதுச்சேரி, லெனின் வீதியில் கடையை வாடகைக்கு எடுத்து சிங்கம் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருவதாகவும், அதில் ரூ. 4 லட்சம் கொடுத்து பங்குதாரராக இணைந்தால், அதில் வரும் லாபத்தை சரியாக பிரித்து கொள்ளலாம் என, கூறியுள்ளனர். இதை நம்பிய டேவிட் பென்னி, அந்தோணி செந்தில்குமாரிடம் பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 48 ஆயிரத்து 617 கொடுத்தார். ஆனால், இதுவரையில் டேவிட் பென்னியை பேக்கரியில் பங்குதாரராக இணைத்ததற்கான ஒப்பந்தம் எதுவும் வழங்கவில்லை. மேலும், பேக்கரியில் வரும் லாபப்பணத்தை பிரித்து கொடுக்கவில்லை. இதுகுறித்து டேவிட் பென்னி கேட்டபோது, அவரை செந்தில்குமார் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து டேவிட் பென்னி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் அந்தோணி செந்தில்குமார், அவரது தாய் முனியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2025