சாத்விக்-சிராக் நம்பர்-7: உலக பாட்மின்டன் தரவரிசையில்
புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 7வது இடத்துக்கு முன்னேறியது.பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 9வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் முடிந்த ஹாங்காங் ஓபனில் சாத்விக்-சிராக் ஜோடி பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தது.ஹாங்காங் ஓபன் ஆண்கள் ஒற்றையரில் அரையிறுதி வரை சென்ற இந்தியாவின் லக்சயா சென், காலிறுதியோடு திரும்பிய ஆயுஷ் ஷெட்டி முறையே 17, 27வது இடங்களுக்கு முன்னேறினர். இதில் ஆயுஷ் ஷெட்டி, முதன்முறையாக 'டாப்-29' பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன், 30வது இடம் பிடித்திருந்தார்.