செய்யூர்: செய்யூரில், நெடுஞ்சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். செய்யூர் பகுதியில், செய்யூர் - மேல்மருவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம், கார், பேருந்து என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வகையில், அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில், மாடுகள் படுத்து ஓய்வெடுப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம், முதலியார்குப்பம், பனையூர் மற்றும் வடக்கு செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேய்ச்சலுக்காக செய்யூர் நோக்கி வரும் மாடுகள், கட்டுப்பாடு இல்லாமல் சாலைகளில் திரிவதும், அங்கேயே படுத்து ஓய்வெடுப்பதும் தொடர்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், வயல்வெளிகள் மற்றும் காலி இடங்களில் மழைநீர் தேங்கி ஈரமாக உள்ளது. இதனால், அங்கு படுக்க முடியாமல், தார்ச்சாலைகளில் மாடுகள் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த வாரம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் பகுதியில், அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், சாலையில் படுத்திருந்த 10 பசுக்கள், உடல் நசுங்கி உயிரிழந்தன. இதுபோன்ற கோர விபத்து நடந்தும், உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல், சாலைகளில் திரிய விடுவது தொடர்கிறது. எனவே, இப்பகுதியில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதித்து, மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.