| ADDED : டிச 02, 2025 06:10 AM
சிங்கபெருமாள் கோவில்: தென்மேல்பாக்கத்தில், சாலை வளைவில் உள்ள கட்சி கொடி கம்ப கான்கிரீட் சுவரால், விபத்து அபாயம் நிலவுகிறது. இந்த கான்கிரீட் சுவரை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9.கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்து சேவை உள்ளதால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் தென்மேல்பாக்கம் பகுதியில், சாலை வளைவில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இந்த கொடி கம்பங்கள் கீழே விழாமல் இருக்க, கான்கிரீட்டில் 3 அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டு உள்ளது. மேலும், அருகிலேயே இரும்பு மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. சாலை வளைவின் அருகில் சுவர் உள்ளதால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, சுவரில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்கள், இதில் அடிக்கடி மோதி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலை ஓரத்தில் உள்ள இந்த கொடி கம்பங்கள் மற்றும் மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.