உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லை அர்ஜுனன் தபசு 3டி ஒளி காட்சி திட்டம் மூன்றாண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி

 மாமல்லை அர்ஜுனன் தபசு 3டி ஒளி காட்சி திட்டம் மூன்றாண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி

மாமல்லபுரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் அர்ஜுணன் தபசு சிற்ப பகுதிக்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கிய '3டி லேசர்' ஒளி - - ஒலி காட்சித் திட்டம் மூன்றாண்டுகளாக கிடப்பில் உள்ளதால், சுற்றுலா பயணியர் அதிருப்தியில் உள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாறைச் சிற்பங்களை, நம் நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் ரசித்து வருகின்றனர். இங்குள்ள நீளமான பாறைக்குன்றின் விளிம்பில், புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் குறிப்பிடத்தக்கது. இது நிலத்திற்கு கீழ், மேல் என அமைந்து சிவபெருமான், தேவர்கள், இமயமலை, கங்கை நதி, பல்வேறு வனவிலங்குகள் உள்ளிட்டவை சிற்ப தொகுப்பாக உள்ளன. பயணியரை கவரும் இச்சிற்பத்தை, '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சியாக ரசிக்கவும் கருதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இத்திட்டத்திற்கு 2023ல் முடிவெடுத்தது. அதற்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சிற்பத்தின் முன்புறம் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலம், திட்டத்திற்காக தேவைப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம், கோவிலின் 7,736 சதுர அடி இடத்தை, 25,000 ரூபாய் மாத வாடகை அடிப்படையில், கோவில் நிர்வாகத்திடமிருந்து ஒப்பந்தத்தில், அதே ஆண்டு பெற்றது. அப்பகுதியில் பார்வையாளர் வளாகம், 3டி லேசர் ஒளி - ஒலி கட்டமைப்புகள், பிரகாச ஒளிவிளக்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் முயன்றது. அப்பகுதி தொல்லியல் துறை சார்ந்தது என்பதால், அங்கு ஏற்படுத்தும் கட்டமைப்புகளுக்கு தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெறுமாறு, சுற்றுலா நிர்வாகத்திற்கு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், சுற்றுலா நிர்வாகம் அனுமதி பெறாமல் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த முயன்று, சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பாக, உரிய திட்டத்துடன் அணுகினால் பரிசீலிப்பதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த ஆண்டு, இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனம், உயரமான இரும்பு தகடுகளால் தடுப்பு அமைத்தது. அப்போது, சிற்பம் மற்றும் கோவில் சூழலுக்கு தடுப்பு இடையூறாக உள்ளதாக, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவை அகற்றப்பட்டன. தொல்லியல் பகுதி புதிய கட்டமைப்பு பணிகளை நிறுத்துமாறு, கோவில் நிர்வாகத்திடம் தொல்லியல் துறை பணி நிறுத்த உத்தரவை அளித்து, போலீசில் புகாரும் அளித்தது. இதையடுத்து, கடந்தாண்டு நவ., 21ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா இயக்குநர், சிற்ப முன்புற முக்கிய சாலையில் லேசர் ஒளி - ஒலி காட்சி நடத்துவது, பொது இடத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது ஆகிய குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து, தொல்லியல் பகுதி அனுமதிக்கான அங்கீகார குழுவிடம் அனுமதி பெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம், லேசர் ஒளி காட்சி இடத்திற்கு செல்ல, கருங்கல் நடைபாதை அமைக்கப்பட்டது. அதன் பின், எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் அதிருப்தியில் உள்ளனர். பணி நிறுத்தம் தொல்லியல் துறையினர் கூறியதாவது: அர்ஜுனன் தபசு லேசர் 3டி ஒளி - ஒலி காட்சி திட்டம், சில சிக்கல்களால் தாமதமானாலும், அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகளை முழுமையாக முடித்து, விரைவில் காட்சியை துவக்குவோம். இந்த திட்டத்தை செயல்படுத்த, அங்கீகார குழு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் கட்டமைப்பை ஏற்படுத்தும் முன், எங்களிடம் விளக்கி ஆலோசிக்க வேண்டும். சிற்பத்தின் முன்புறம் உள்ள சாலையில் கட்டமைப்பை ஏற்படுத்த, நெடுஞ்சாலைத் துறையிடம் தடையில்லா சான்று பெற்றதாக கூறி, சாலையில் பெரிய பள்ளம் தோண்டினர். சிற்ப பகுதியில் தோண்டிய பள்ளம் என்பதால், பணியை தடுத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை