மறைமலை நகர்: அனுமந்தபுரம் ஊராட்சியில், வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், தர்காஸ், தாசரிகுப்பம், சந்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழில். கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்படுகின்றன. செம்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த கிராமத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் செல்லும் மின் கம்பிகள், பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக, வயலுக்கு செல்லும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால், மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். தொடரும் அவதி அனுமந்தபுரம் விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக, இப்பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. டிராக்டர் இயந்திரம் வாயிலாக உழவுப் பணிகள் மேற்கொள்ளும் போது, மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் பணிகளில் தடை ஏற்படுகிறது. அதேபோல, அறுவடை காலங்களில், இயந்திரங்கள் மூலமாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போது, தனியாக ஆட்கள் வைத்து மரக் கிளைகள் மூலமாக மின் கம்பிகளை உயர்த்தி வழி ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது. மின் வாரிய அலுவலகத்தில் இதுகுறித்து முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன், இந்த மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.