மாமல்லபுரம்: இந்திய நாட்டிய விழாவை, இம்மாத இறுதியில் துவக்க, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால பாரம்பரிய பாறை சிற்பங்கள் உள்ளன. உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு மகிழ்கின்றனர். சர்வதேச பயணியர் ஆண்டு இறுதியில், அக்டோபர் முதல் அடுத்த சில மாதங்கள் வரை, அதிக அளவில் குவிகின்றனர். இந்திய கலை, கலாசாரம், பாரம்பரியம், விழாக்கள் உள்ளிட்டவை குறித்து அறிய, இப்பயணியர் ஆர்வமாக உள்ளனர். தமிழக சுற்றுலாத்துறையும், அவர்களின் விருப்பம் கருதி, ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி முதல், இங்கு இந்திய நாட்டிய விழாவை நடத்துகிறது. இவ்விழா, தினமும் மாலை பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி என, வெவ்வேறு மாநில பாரம்பரிய நாட்டியங்கள், தமிழகத்தின் கரகம், காவடி, சிலம்பம் உள்ளிட்டவை, பிற மாநில நாட்டுப்புற கலைகள் என, ஒரு மாதம் நிகழ்த்தப்படும். தற்போதும் சுற்றுலாத்துறை, கலைக்குழுக்களை தேர்வு செய்வதற்காக, வரும் 5ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவித்துள்ளது. இக்குழுக்களை தேர்ந்தெடுத்து, முதல்வர் ஸ்டாலினிடம் விழாவிற்கு ஒப்புதல் பெற்று, வரும் 20 முதல்- 23ம் தேதிக்குள் விழாவை துவக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக, சுற்றுலாத் துறையினர் தெரிவித்தனர்.