உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட மின்மாற்றி மீண்டும் பொருத்த பனையூர் மக்கள் வலியுறுத்தல்

 சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட மின்மாற்றி மீண்டும் பொருத்த பனையூர் மக்கள் வலியுறுத்தல்

செய்யூர்: பனையூர் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மின்மாற்றியை, மீண்டும் பொருத்த வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பனையூர் மாமரம் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றி மூலமாக, கிராமத்தில் உள்ள 80 வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டு, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, இந்த மின்மாற்றி அகற்றப்பட்டது. தற்காலிகமாக, ரகுமான்யா சாலையில் உள்ள மின்மாற்றியில் இணைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு தற்போது மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு, இந்த ஒரே மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால், காலை மற்றும் இரவு நேரத்தில் மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டு, வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் முறையாக செயல்படாமல், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மின்னழுத்த குறைபாடு காரணமாக இரவு நேரத்தில் மின்விசிறிகள் மெதுவாக இயங்குவதால், போதிய காற்றோட்டம் இல்லாமல் முதியோர், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டு உபயோக மின்சாதன பொருட்களும், அடிக்கடி பழுதடைகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், ஏற்கனவே மாமரம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மின்மாற்றியை பொருத்த, அங்கு புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன. ஆனால், இன்னும் மின்மாற்றி பொருத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை. எனவே, மீண்டும் மின்மாற்றியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை