தடம் எண் 129 புறநகர் பேருந்தை செங்கை பணிமனைக்கு மாற்ற கோரிக்கை
மதுராந்தகம்: உத்திரமேரூர் பணிமனையிலிருந்து தடம் எண் '129' புறநகர் பேருந்தை, செங்கல்பட்டு பணிமனைக்கு மாற்ற வேண்டுமென, எல்.எண்டத்துார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு பணிமனையிலிருந்து எல்.எண்டத்துாருக்கு, தடம் எண் '129' புறநகர் பேருந்து இயக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து, உத்திரமேரூர் பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், காலை நேரத்தில் பேருந்து வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த பேருந்து, காலை 4:30 மணிக்கு எல்.எண்டத்துாரில் இருந்து புறப்பட்டு வேடந்தாங்கல், படாளம், செங்கல்பட்டு வழியாக, தாம்பரத்திற்குச் சென்றது. அதேபோல், தாம்பரத்திலிருந்து மீண்டும் அதே வழித்தடத்தில், எல்.எண்டத்துாருக்கு இயக்கப்பட்டு, இரவு எல்.எண்டத்துார் பகுதியில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு பேருந்து எல்.எண்டத்துாரிலிருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென இப்பேருந்து செங்கல்பட்டு பணிமனையிலிருந்து, உத்திரமேரூர் பணிமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், எல்.எண்டத் துாரில் இருந்து, 4:30 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் பேருந்து, தற்போது உத்திரமேரூரில் இருந்து வருவதால், காலை 6:00 மணிக்கு தான் எல்.எண்டத்துாருக்கு வருகிறது. இதனால், வெளியூர் பகுதிக்கு வேலைக்குச் செல்வோர் மற்றும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பேருந்தை மீண்டும் செங்கல்பட்டு பணிமனையிலிருந்து இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, எல்.எண்டத்துாரைச் சேர்ந்த ஆர்.பரமசிவம் என்பவர் கூறியதாவது: செங்கல்பட்டு பணிமனையிலிருந்து எல்.எண்டத்துாருக்கு இயக்கப்பட்ட தடம் எண் '129' பேருந்து, உத்திரமேரூர் பணிமனைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது. எனவே, எல்.எண்டத்துாருக்கு தாமதமாக பேருந்து வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். இதற்கு முன் இந்த பேருந்து, இரவு எல்.எண்டத்துாரில் நிறுத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை இயக்கப்பட்டதால், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது உத்திரமேரூர் பணிமனைக்கு மாற்றப்பட்டதால், சிரமமாக உள்ளது. அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த புறநகர் பேருந்தை செங்கல்பட்டு பணிமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.