கட்டணம் செலுத்தி சிற்பத்தை ரசித்த சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்
மாமல்லபும்: சுவிட்சர்லாந்து நாட்டு ஹாக்கி வீரர்கள், கட்டணம் செலுத்தி மாமல்லபுரம் சிற்பங்களை ரசித்தனர். மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் உள்ளன. அவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இவற்றை ரசிக்க வரும் நம் நாட்டவரிடம் தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, அத்துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது. ஒரு சிற்ப பகுதியில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம். அரசு விருந்தினர், தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெற்றவர் மட்டும், கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில், ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி, கடந்த நவ., 28ம் தேதி துவங்கி, நாளை மறுநாள் வரை நடக்கிறது. இதில், பல நாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய அணியினர், நவ., 25ம் தேதி, மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசித்தனர். அரசுத் துறையினரும் உடன் வந்து பரிந்துரைத்து, அவர்கள் கட்டணமின்றி சிற்பங்களை கண்டனர். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் 20 வீரர்கள் உள்ளிட்ட 26 பேர், நேற்று மாமல்லபுரம் சிற்பங்களை ரசிக்க இங்கு வந்தனர். அவர்களுடன் அரசுத் துறையினர் வராமலும், அரசின் பரிந்துரையும் இல்லாமலும், சற்று நேரம் காத்திருந்தனர். பின்னர், நுழைவுக்கட்டணம் செலுத்தி, சிற்பங்களை கண்டு ரசித்தனர்.