பாலாறில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் ஜனவரியில்...முடியுமா?:நிரந்தர தீர்வுக்காக இரும்புலிச்சேரி மக்கள் காத்திருப்பு
மாமல்லபுரம்: இரும்புலிச்சேரி பாலாறில், இடிந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக, 46 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள், வரும் ஜனவரியில் முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி மற்றும் எடையாத்துார் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், பாலாறு கடக்கிறது. எடையாத்துார் பகுதியில் இரண்டாக பிரியும் பாலாறு, சில கி.மீ., துாரத்திற்கு தனி ஆறாக கடந்து, இரும்புலிச்சேரி பகுதியில் மீண்டும் இணைகிறது. இதனால், மேற்கண்ட இரண்டு கிராமங்களும், ஆற்றின் இடையே தனித்தீவுகளாக உள்ளன. தரைப்பாலம் அத்தியாவசிய தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத்திற்கு இப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்கின்றனர். இப்பகுதியை மற்ற பகுதிகளுடன், புதுப்பட்டினம் - நெரும்பூர் சாலை இணைக்கிறது. இந்த சாலைக்குச் செல்ல, ஆற்றின் குறுக்கே, 35 ஆண்டுகளுக்கு முன், இரும்புலிச்சேரியில் தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதையடுத்து, எடையாத்துார் பகுதியில் பாலம் இல்லாததால், எடையாத்துார் - பாண்டூர் இடையே ஆற்றைக் கடந்தும், வெள்ளப்பெருக்கு காலத்தில், இரும்புலிச்சேரி தரைப்பாலம் வழியாகவும் சென்றனர். இதற்கிடையே, கல்பாக்கத்தில் இயங்கும் பாவினி அணுமின் நிறுவனம், சென்னை அணுமின் நிலையம் ஆகியவை சார்பில், எடையாத்துார் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. அதேநேரம், இரும்புலிச்சேரி தரைப்பாலம் பலமிழந்து, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடிந்தது. இதனால், போக்குவரத்து அவசியம் கருதி, பழைய பாலத்திற்கு 1 கி.மீ., கிழக்கில், பழைய வீராணம் திட்ட கான்கிரீட் குழாய்களை வைத்து, தற்காலிக மண்பாதை அமைக்கப்பட்டது. ஒப்புதல் இந்த தற்காலிக மண் பாதையும், ஒவ்வொரு ஆண்டும் மழை நேரத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இரும்புலி கிராம மக்கள், வெள்ளப்பெருக்கு காலத்தில், எடையாத்துார் - பாண்டூர் பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனர். இதனால், தங்கள் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்குமாறு, தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். அரசும் பரிசீலித்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்டம் சார்பில், 46 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்தது. பாலம் கட்டுமானத்திற்கான,'டெண்டர்' கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டு, கடந்தாண்டு பிப்ரவரியில் பூமிபூஜையுடன் துவக்கப்பட்டது. பழைய மண்பாதை பாலம் முற்றிலும் அகற்றப்பட்டு, தற்போது புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம், 644 மீட்டர் நீளம், 10 மீ., அகலம், 23 அடி உயரம் என்ற அளவில், 22 துாண்களுடன் கட்டப்படுகிறது. பாலாறின் ஒருபுறம் கரையிலிருந்து, மறுபுறம் கரை அருகில் வரை, கான்கிரீட் துாண்கள் அமைத்து, அதன் மீது பாலமும் கட்டப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பு எஞ்சியுள்ள சில துாண்கள் கட்டுமானமும் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை, ஜனவரியில் முடிக்கும் வகையில் ஒப்பந்த காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா என, கேள்வி எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில், இப்பணிகளை விரைந்து முடித்து, குறித்த காலத்திற்குள் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, இரும்புலிச்சேரி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். போக்குவரத்து அவசியம் கருதி, பழைய பாலத்திற்கு 1 கி.மீ., கிழக்கில், பழைய வீராணம் திட்ட கான்கிரீட் குழாய்களை வைத்து, தற்காலிக மண்பாதை அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக மண் பாதையும், ஒவ்வொரு ஆண்டும் மழை நேரத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இரும்புலி கிராம மக்கள், வெள்ளப்பெருக்கு காலத்தில், எடையாத்துார் - பாண்டூர் பாலம் வழியே, 5 கி.மீ., சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனர்.