தனியார் விடுதியில் மின் கசிவால் தீ விபத்து திருத்தணியில் 150 பக்தர்கள் உயிர் தப்பினர்
திருத்தணி, திருத்தணியில் உள்ள தனியார் விடுதியில், மின் கசிவால் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த 150 பக்தர்கள், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய பஜார் தெருவைச் சேர்ந்த குமரன், 59, என்பவர், திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, 'குமரன் ரெசிடென்சி' என்ற தனியார் விடுதி நடத்தி வருகிறார். நான்கு மாடி கொண்ட கட்டடத்தின் கீழ்தளத்தில், 'குமரன் சரவணா சூப்பர் மார்க்கெட்' வைத்துள்ளார். இந்த விடுதியில், 35க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக, திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடந்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகை தந்துள்ளனர். 'குமரன் ரெசிடென்சி' விடுதியில், அறை எடுத்து 150 பக்தர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் விடுதியின் முதல் மாடியில் பொருட்கள் வைக்கும் அறையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, கொழுந்துவிட்டெரிந்தது. அறையில் தங்கியிருந்த பக்தர்கள், அலறி அடித்து வெளியேறினர்; 10க்கும் மேற்பட்டோர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். திருத்தணி மற்றும் அரக்கோணம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஆடிக்கிருத்திகை விழா பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த 30க்கும் மேற்பட்ட போலீசார், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். பின், மாடியில் இருந்த பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. சிலருக்கு மூச்சு திணறல் ஏற்படவே, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், விடுதியில் தங்கியிருந்த 150 பக்தர்களும் சிறுகாயங்கள் கூட இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.