சென்னை: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், நெமிலியில் 16,000 காட்டு வாத்துகள் முகாமிட்டுள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சென்னை, பள்ளிக்கரணையில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. அதேபோல் பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இடையே கேளம்பாக்கம், நெமிலி பகுதிகளிலும் பறவைகள் முகாமிடுகின்றன. குறிப்பாக, ஊசிவால் வாத்து, நாமதலை வாத்து போன்ற காட்டுவாத்துகள் இங்கு அதிகமாக வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி இங்கு, 16,000 காட்டு வாத்துகள் முகாமிட்டுள்ளன. 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: கேளம்பாக்கம், நெமிலியில் கைவிடப்பட்ட உப்பளங்கள், பறவைகளுக்கான புகலிடமாக மாறியுள்ளன. இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக, பறவைகள் வருகை குறித்து கண்காணித்து வருகிறோம். தற்போது 6,000 நீலச்சிறகி, 4,000 ஊசிவால் வாத் து, 4,000 நாமதலை வாத்து, 1,600 தட்டைவாயன், 400 கிளுவை என, 16,000 காட்டு வாத்துகள் முகாமிட்டுள்ளன. ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நீர்மட்டம் காரணமாக, காட்டு வாத்துகளுக்கு தேவையான உணவு கிடைப்பது பறவைகளின் வருகைக்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் நட மாட்டம், வாகன நெரிசல் போன்ற பிரச்னைகள் ஓரளவுக்கு இருந்தாலும், காட்டு வாத்துகள் இப்பகுதியை விரும்பி வருகின்றன. தற்போது, 16,000 ஆக உள்ள எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில், 20,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.