சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 4,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்ததால், 300க்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது; உரிய நேரத்தில் பேருந்து கிடைக்காமல் பயணியர் சிரமப்பட்டனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் பிரிவில் 30 சதவீதம் வரை காலி பணியிடங்கள் உள்ளன. அதனால், 'ஸ்டால் வார்ட்' நிறுவனத்தின் வாயிலாக ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்து, மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மத்திய பல்லவன் பணிமனை, பெரம்பூர், அயனாவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உட்பட 12 பணிமனைகளில் மட்டும் 4,000 ஊழியர்கள், தனியார் நிறுவனம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சில மாதங்களாக, தாமதமாக மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை இன்னும் சம்பளம் வழங்காததை கண்டித்து, ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை பணிக்கு வரவில்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது; பேருந்து கிடைக்காமல் பயணியர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து போக்குவரத்து கழக நிர்வாகம், அவர்களை அழைத்து பேசியதை தொடர்ந்து, நேற்று மாலை முதல், சிலர் பணிக்கு வந்தனர். ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், 'ஒப்பந்தப்படி, மாதந்தோறும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 13ம் தேதி ஆகியும் சம்பளம் வழங்கவில்லை. வீட்டு வாடகை, தனிநபர் கடன், இதர வீட்டு செலவுக்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். சம்பளத்தை மாதந்தோறும் முறையாக வழங்க வேண்டும்' என்றனர். மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஒப்பந்த ஊழியர்களின் மாத சம்பள பிரச்னை அறிந்ததும், நேற்று மாலையே, அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.