| ADDED : டிச 07, 2025 05:35 AM
சித்தாமூர்: தென்னாடு அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், தி.மு.க., பிரமுகர் குடும்பத்துடன், தன் பேரன் பிறந்தநாள் விழாவை 'கேக்' வெட்டி கொண்டாடியது, சர்ச்சையை கிளப்பி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம், இப்பள்ளியில், தென்னாடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரும், தி.மு.க., மதுராந்தகம் தெற்கு ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான சீனிவாசன் என்பவரின் பேரக்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பள்ளி நேரத்தில், குடும்பத்தினர் 10க்கும் மேற்பட்டோருடன் சென்று, வகுப்பறையில் 'கேக்' வெட்டி கொண்டாடியது, கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி வழங்கியது யார்? பள்ளிக்கூடம் என்ன 'பார்டி ஹாலா' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.