| ADDED : நவ 15, 2025 12:10 AM
கோயம்பேடு: பேருந்தில் கணவருடன் பயணித்த பெண்ணிடம் நகை, பணம் திருடி, உள்ளாடையில் மறைத்த கரூர் முதியவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்தவர் நர்மதா, 31. இவர், கணவருடன் இடியாப்பம் வியாபாரம் செய்கிறார். கடந்த 9ம் தேதி இருவரும், சொந்த ஊரான சிவகங்கை சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்தில் சென்னை திரும்பினர். பேருந்து, கோயம்பேடிற்கு வந்தபோது, தன் உடைமைகளை நர்மதா சோதித்ததில், கட்டப்பையில் இருந்த கைப்பை திறந்திருந்தது. அதிலிருந்த 14,000 ரூபாய் மற்றும் 8,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளி கைச்சங்கிலி மாயமானது தெரிந்தது. தங்கள் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக, பேருந்து ஓட்டுநர் மூலம் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் சோதனையில் நகை, பணத்தை திருடிய முதியவர், உள்ளாடையில் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்காரம், 60 என்பதும், நர்மதா துாங்கும்போது திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.