| ADDED : டிச 02, 2025 04:11 AM
ஆலந்துார்: சாலை உள்வாங்கியதில், தவறான திசையில் நிறுத்தப்பட்ட கன்டெய்னர் வேன் ஒன்று சிக்கியது. ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் வாகனம் மீட்கப்பட்டது. ஆலந்துார், மண்டி தெரு பகுதியில் பெயின்ட் உள்ளிட்ட வீட்டு கட்டுமான மூலப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையான மூலப் பொருட்கள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் வேன் வாயிலாக, நேற்று காலை கொண்டு வரப்பட்டது. பொருட்களை இறக்கிய பின், எம்.கே.என்., சாலை வழியாக வேன் புறப்பட்டது. பரங்கிமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் எதிரே, தவறான திசையில் கன்டெய்னரை நிறுத்திய ஓட்டுநர், அருகில் உள்ள கடைக்கு சென்றார். எம்.கே.என்., சாலையோரம் மின்வடம் புதைக்க, சமீபத்தில் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. அதன் மீது வேன் நிறுத்தப்பட்டதால், சாலை உள்வாங்கி வேன் சிக்கியது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், அங்கு சென்று, கிரேன் உதவியுடன் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின், கன்டெய்னர் வேனை மீட்டனர். இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், தவறான திசையில் வாகனத்தை நிறுத்தியதால், 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.