உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அய்யப்பன்தாங்கலில் ரூ.50 கோடி அரசு நிலம்...அபகரிப்பு: 4 ஆண்டுகளாக அகற்றாமல் அதிகாரிகள் வேடிக்கை

அய்யப்பன்தாங்கலில் ரூ.50 கோடி அரசு நிலம்...அபகரிப்பு: 4 ஆண்டுகளாக அகற்றாமல் அதிகாரிகள் வேடிக்கை

அய்யப்பன்தாங்கல்: அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.86 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய் வட்டாட்சியர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு கடிதங்கள் அனுப்பி நான்கு ஆண்டுகளாகியும், இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், சென்னை புறநகர் பகுதியான அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. இங்குள்ள மேட்டுக்காலனி, போரூர் காவல் நிலையம் எதிரே சர்வே எண் 38ல், 1.86 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இது, வருவாய் துறை ஆவணங்களில், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு தேவையான பொது கழிப்பறை, நுாலகம், குடிநீர் தொட்டி ஆகியவை கட்ட, 2006ல் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அங்கு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள், செப்டிக் டேங்கை இடித்து அகற்றி, நிலத்தை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். பின், 2019ல் ஆக்கிரமிப்பாளர்கள், அந்த அரசு நிலத்தை மனைகளாக பிரித்து, தற்காலிக சாலை அமைத்தனர். மேலும், ஐந்து தனிநபர்கள் பெயரில், அதிகாரிகள் உதவியுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், காவல் துறை, வருவாய் துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இந்த நிலத்தில், இரண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மேலும், சில வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. போலி பட்டாக்களை ரத்து செய்யவும், அய்யப்பன்தாங்கல் கிராம சர்வே எண் 38ன் உட்பிரிவுகளை ரத்து செய்ய கோரியும், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு குன்றத்துார் வட்டாட்சியர் கடந்த 2020ல் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்ககோரி, 2020ம் ஆண்டு, குன்றத்துார் வட்டாட்சியருக்கு கலெக்டர் கடிதம் அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் 2021 அக்., மாதம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தனர். அப்போது, 'உரிய முறைப்படி நில வகைப்பாடு மாற்றம் நடக்கவில்லை. வழிமுறை இல்லாமல் நத்தமாக மாற்றி பட்டா வழங்கப்பட்டுள்ளது' என, குன்றத்துார் வட்டாசியருக்கு கடிதம் அனுப்பினர். அந்த கடிதம் அனுப்பி நான்கு ஆண்டுகள் கடந்தும், சர்வே எண் 38ல் உள்ள ஆக்கிரமிப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மவுனமாக உள்ளது. மிரட்டுகின்றனர் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற, 2005 முதல் புகார் அளித்து வருகிறோம். கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு, வருவாய் தீர்வாயத்திலும் தொடர்ந்து புகார் அளிக்கிறோம். ஆனால் இதுவரை, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும், சர்வே எண் 38ல் உள்ள நிலம் தொடர்பான ஆவணங்களை தகவல் உரிமை சட்டம் வாயிலாக பல ஆண்டுகளுக்கு முன் கேட்டும், காஞ்சிபுரம் வருவாய் துறையினர் உரிய பதில் அளிக்காமல் தட்டிக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து போராடி வரும் நிலையில், வருவாய் அதிகாரிகளே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக மறைமுகமாக மிரட்டல் விடுக்கின்றனர். - ஆர்.கே.ரவிசந்திரன், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி

20 ஆண்டுகளாக புகார்

நடவடிக்கை எப்போது?

அய்யப்பன்தாங்கலில், சர்வே எண் 38ல் உள்ள அரசு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, 2005 முதல், ஊராட்சி தலைவர் மற்றும் வட்டாட்சியருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 20 ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், 2019 ஆக., மாதம் அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். அந்த இடத்தில் எட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள 1.86 ஏக்கர் நிலத்தின் மதிப்பு தற்போது, 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ