சென்னை: ராஜஸ்தானில் நடந்த 'கேலோ இந்தியா' கூடைப்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி வெள்ளி பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 'கேலோ இந்தியா' பல்கலை கூடைப்பந்து போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவில் நடந்தது. இதில், 8 ஆடவர், 8 பெண்கள் என, 16 பல்கலை அணிகள், நான்கு பிரிவுகளாக பங்கேற்றன. போட்டி லீக் கம் நாக் - -அவுட் முறையில் நடைபெற்றது. அந்த வகையில், மகளிர் 'ஏ' பிரிவில் இடம் பிடித்த சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மகளிர் அணி, தனது சிறப்பான ஆட்டத்தால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று, தனது பிரிவின் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, பஞ்சாப் பல்கலை அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, கேரளாவின் எம்.ஜி., பல்கலையை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 60 - 74 என்ற புள்ளிக்கணக்கில் எம்.ஜி., பல்கலை அணியிடம் வீழ்ந்தது. இதனால், சென்னை எஸ்.ஆர்.எம்., அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. அதேபோல், வாலிபால் இறுதிப்போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, கேரளாவின் கோழிக்கோடு அணியை எதிர்த்து மோதியது. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 1 - 3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளி பதக்கம் பெற்றது.