சென்னை: ''சர்க்கரை நோயை, 24 மணி நேரமும் கண்காணிக்கும், 'கண்டினியூஸ் குளூக்கோஸ் மானிட்டர்' என்ற சாதனம், மருத்துவ உலகின் சிறந்த முன்னேற்றம்,'' என, காஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நீரிழிவு சிகிச்சை நிபுணர் சரண்யா தேவி கூறினார். இதுகுறித்து, டாக்டர் சரண்யா தேவி கூறியதாவது: 'கண்டினியூஸ் குளூக்கோஸ் மானிட்டர்' வாயிலாக சர்க்கரை அளவை, 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இதில், இருக்கும் சென்சாரை, கை அல்லது வயிற்று பகுதியில் வைப்பதால், சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கலாம். சர்க்கரை அளவுக்கான ஒப்பீடு, 'கிராப் வரைபடம்' ஆக கிடைக்கும். இதன் வாயிலாக சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கண்டறிந்து, அதற்கேற்ப உணவு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கொள்ள முடியும். மேலும், திடீர் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்தும், நம்மை பாதுகாத்து கொள்ளலாம். இந்த சாதனம், 'ப்ளூடூத்' வாயிலாக, மொபைல் போனுடன் இணைப்பில் இருப்பதால், திடீரென சர்க்கரை அளவு அதிகரித்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால், சர்க்கரை நோயாளிகளை மற்றவர்களாலும் கண்காணிக்க முடியும். அனைத்து நீரிழிவு நோயா ளிகளும் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக, டைப் 1, டைப் 2 நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் செலுத்துவோர், கர்ப்பிணியர் பயன்படுத்தும் வகையிலான மிகவும் பயனுள்ள சாதனம் இது. இந்த நவீன தொழில்நுட்பம், நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.