| ADDED : நவ 14, 2025 02:44 AM
சென்னை: புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால், சிறுநீர் அடைப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையில், லேசர் சிகிச்சையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை தலைவர் பி.சத்யநாராயணன் கூறியதாவது: உலகளவில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், 50 முதல் 60 சதவீதம் பேருக்கு, 'புரோஸ்டேட்' சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது. இவை கடுமையானதும், சிறுநீர் அடைப்பு பிரச்னை ஏற்படுகிறது. இதனால், சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது சிரமப்படுதல், சிறுநீர் மெதுவாக வருவது மட்டுமின்றி, சிறுநீர் முழுமையாக கழிக்கவில்லை என்ற உணர்வு ஏற்படும். இதுபோன்ற பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டை சேர்ந்த 74 வயது வயது முதியவர் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு, சிறுநீரகவியல் முதுநிலை நிபுணர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தீபக் தலைமையில், டாக்டர்கள் வருண், முரளிதரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர், 'ஹோல்மியம் லேசர்' கருவி வாயிலாக வீங்கிய புரோஸ்டேட் திசுக்களை துல்லியமாக அகற்றினர். இந்நோயாளிக்கு இதய பாதிப்பு இருந்தும், இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.