துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆரில் புதுப்பிக்கப்பட்ட தார் சாலை, ஒரே வாரத்தில் பெயர்ந்து, மீண்டும் பள்ளமாகி உள்ளது. ஓ.எம்.ஆரில் மெட்ரோ பணி முடிந்த 3.5 கி.மீ., தொலைவுக்கு சாலை புதுப்பிக்கப்பட்டது. பள்ளத்தை ஒட்டு போட்டு சீரமைத்துவிட்டு, பருவமழை முடிந்த பின் முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம் பகுதிகளில், கடந்த வாரம் சாலை முழுதும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், ஒரே மழைக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பள்ளம் விழுந்து வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தார் சாலை, 15 நாட்களாவது வெயிலில் காய்ந்தால் தான் தரமாக இருக்கும். மழைக்கு தாங்கும். மழை நேரத்தில் 'பேட்ச் ஒர்க்' மட்டுமே செய்ய கூறினோம். ஒப்பந்த நிறுவனங்கள் முழு சாலையையும் போட்டதால், மழையில் தாங்கவில்லை. பள்ளமான பகுதிகளை சீரமைக்க கூறி உள்ளோம்' என்றனர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் விடாமல் பெய்த மழையால், ஜி.எஸ்.டி., சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை, தாம்பரம் - முடிச்சூர் சாலை, பல்லாவரம் - திருநீர்மலை, பல்லாவரம் - குன்றத்துார் சாலைகளில், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பெருங்களத்துாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பியவர்கள், மழையில் நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, கொரட்டூர், மண்ணுார்பேட்டை, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆகிய சந்திப்புகளில், மழை வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் மெல்ல மெல்ல வடிந்தாலும், வாகனங்களில் செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.