| ADDED : டிச 02, 2025 04:07 AM
சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில், தமிழகம் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்கள் கைப்பற்றி அசத்தியது. இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் இந்திய தடகள சங்கம் சார்பில், 69வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானாவின் பிவானியில் நடைபெற்றது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங் கேற்றனர். ஆண்கள் பிரிவு போல்வால்ட் போட்டியில், தமிழக மாணவர் சஞ்சய் குமார் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், மும்முறை தாண்டுதல் போட்டியில் அனுஜ்நாதன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், பெண்கள் பிரிவு போல்வால்ட் போட்டியில் மகாலட்சுமி வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். இதனுடன், ஆடவர் 110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப் பந்தயத்தில் மரிய எபினேஷ், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் அம்பரீஷ், ஆண்கள் பிரிவு போல்வால்ட் போட்டியில் கார்த்திக்வாசன், சுந்தரமூர்த்தி ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர். பெண்கள் பிரிவு 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் மாணவி அபிநயா வெண்கலப் பதக்கம் வென்றார். முடிவில், தமிழக அணி ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என, மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.