| ADDED : பிப் 25, 2024 12:48 AM
கோவை:கத்தியை காட்டி மிரட்டி, ராஜஸ்தான் வாலிபரிடம் நகை, மொபைல் போன் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பாபுலால், 44. இவர் கோவை வடவள்ளி அடுத்த இடையர்பாளையத்தில் தங்கியிருந்து, தனது மாமாவின் டெக்ஸ்டைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 16ம் தேதி பாபுலால் தடாகம் ரோட்டில் உள்ள, டாஸ்மாக் மதுக்கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த, 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பாபுலால் தனது பைக்கில் வீடு திரும்பினார்.அப்போது மதுக்கடையில் தகராறில் ஈடுபட்ட அந்த நபர்கள், பைக்கில் பாபுலாலை பின் தொடர்ந்து சென்றனர். இடையர்பாளையம் அருகே இருவரும், பாபுலாலை வழிமறித்து நிறுத்தினர். பின் தகாத வார்த்தைகளால் திட்டினர். கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த, 12 பவுன் செயின், 1.5 கிராம் கடுக்கன் மற்றும் மொபைல் போனை பறித்து, தப்பிச் சென்றனர்.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5.20 லட்சம் என தெரிகிறது. பாபுலால் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.