உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதவி உயர்வை பறிக்கும் வேளாண் பல்கலை விதிமுறை; இரண்டாம் நாளாக இணைப் பேராசிரியர்கள் போராட்டம்

பதவி உயர்வை பறிக்கும் வேளாண் பல்கலை விதிமுறை; இரண்டாம் நாளாக இணைப் பேராசிரியர்கள் போராட்டம்

கோவை; வேளாண் பல்கலை மேம்பாட்டுக்குழுவின் புதிய பரிந்துரை காரணமாக, பதவி உயர்வு மறுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட இணைப் பேராசிரியர்கள், யு.ஜி.சி., - ஐ.சி.ஏ.ஆர்., விதிமுறைக்கு உட்பட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய நிபந்தனையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, வேளாண் பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முன் நேற்று, இரண்டாம் நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இணைப் பேராசிரியர்கள் கூறியதாவது: வேளாண் பல்கலையில், 300 இணைப்பேராசிரியர்கள் பேராசிரியர் பதவிக்கும், 44 உதவிப் பேராசிரியர்கள் அடுத்த நிலைக்கும் பதவி உயர்வு கோரி விண்ணப்பித்தனர். இதற்கான நேர்காணல் ஆக., 20 முதல் 23 வரை நடந்தது. செப்., 10ல் முடிவு வெளியானது. 344 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட போதும், 22 இணை பேராசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. இம்முடிவுகள், பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைகளுக்கு உட்பட்டோ, அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ஐ.சி.ஏ.ஆர்.,) விதிமுறைகளுக்கு உட்பட்டோ அறிவிக்கப்படவில்லை. வேளாண் பல்கலை மேம்பாட்டுக்குழு ஒப்புதல் அளித்த, 'ஓர் ஆசிரியருக்கு ஓராண்டுக்கு ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை' (நாஸ் புள்ளிகள் 6க்கும் மேல்) என்ற பரிந்துரைப்படி, வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்நடைமுறை, பதவி உயர்வுக்கோ அல்லது துறைத் தலைமை, பல்கலை அதிகாரிகள் போன்ற நிர்வாக பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும்போதோ, நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு ஆசிரியரால், ஓராண்டுக்கு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடுவது சாத்தியமற்றது. ஓராண்டுக்கு ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற நிபந்தனையை நீக்க வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது. கடந்த வியாழன் அன்று நடைபெற்ற, உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் (டி.எல்.எம்.,) மேற்கூறிய முறையை நீக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், பதவி உயர்வு மறுக்கப்பட்ட இணை மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு,பதவி உயர்வு பற்றிய ஒப்புதல், அதற்குரிய உறுதிமொழி இதுவரை பல்கலை நிர்வாகத்திடம் இருந்து அளிக்கப்படவில்லை. இது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கோரிக்கை என்பதால், பல்கலையின் மற்ற பேராசிரியர்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.வேளாண் துறை அமைச்சர், வேளாண் உற்பத்தி கமிஷனர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jay Subramanian
செப் 13, 2025 23:41

நியாயமான கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவது அனைவராலும் முடியாத செயல். குறிப்பாக extension, KVK போன்ற துறைகளில் இதற்கு வாய்ப்பே இல்லை. பல ஆராய்ச்சிகளில் இரண்டு ஆண்டு data முக்கியம். மேலை நாடுகளில் கூட இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பின்பற்ற படுகிறது. அங்கு வேலை மாற்றம் transfer இல்லை. ஒருவர் ஒரே துறையில் பணி புரிகிறார்கள். ஆனால் ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகள் மிக முக்கியம். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை