கோவை: விமான நிலைய விரிவாக்கத்துக்கு மீதமுள்ள நிலத்தை, இம்மாத இறுதிக்குள் ஆணையம் வசம் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதிய வரைபடத்துக்கு இறுதி ஒப்புதல் பெறும் முயற்சியில், விமான நிலைய அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியது. சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர் மற்றும் இருகூர் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு இழப்பீடு வழங்கி, கையகப்படுத்தி, ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டது.
இருப்பினும், இன்னும் சில ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலத்தை இம்மாத இறுதிக்குள் ஆணையத்துக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. இரண்டாம் கட்டமாக, கூடுதலாக கோரப்பட்ட 19 ஏக்கர் நிலத்துக்கு, தமிழக அரசின் நிர்வாக அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையம் விஸ்தரிக்கப்படும்போது, அதன் நுழைவாயில் நீலாம்பூர் பகுதியில் அமையும். அவிநாசி ரோட்டில் இருந்து, விமான நிலையம் செல்வதற்கான வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்துதல்) வித்யாவிடம் கேட்டபோது, ''தனியாரிடம் இருந்து இன்னும் 2.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. இதுபோக, 8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கொடுக்க வேண்டும். நீலாம்பூர் பகுதியில் 10 ஏக்கர் நிலம் கொடுப்பது தொடர்பாக, ஆலோசனை நடந்து வருகிறது,'' என்றார். விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எல்லை கற்கள் நடும் பணி நடந்து வருகிறது. சின்ன சின்ன பிரச்னைகள் வருகின்றன. அவை தீர்க்கக் கூடியவையே. அடுத்தாண்டு ஜன., அல்லது பிப்ரவரி மாதத்தில், விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு டெண்டர் கோருவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக, புதிய வரைபடத்துக்கு இறுதி ஒப்புதல் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம்' என்றனர்.