தினமலர் பட்டம் வினாடி -- வினா போட்டி : திறமை காட்டி அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்
மேட்டுப்பாளையம்: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்- பரிசை வெல்' வினாடி-வினா போட்டி நடந்துவருகிறது. பள்ளி அளவிலான சுற்றில், வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் மகாஜனா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 125 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'ஊ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியில் இடம்பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜெயசாலினி, 6ம் வகுப்பு மாணவி லியா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் சண்முகசுந்தரம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் இடைநிலை ஆசிரியர் ஸ்ரீ வித்யா, அறிவியல் ஆசிரியர் அம்சவேணி ஆகியோர் இருந்தனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு அருகே உள்ள சச்சிதானந்த ஜோதிநிகேதன் பன்னாட்டு பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'இ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியில் இடம்பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீசுதன், அனிருத் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மற்றும் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தமிழ் ஆசிரியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சி மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள் கிப்ட் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில், முதற்சுற்றில் 56 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர், 8 அணிகளாக பங்கேற்றனர். இதில், 'பி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், திக்ஷித் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் ஜெயலக்ஷ்மி, சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.