கார் பார்க்கிங் பகுதியான அரசு அலுவலகங்கள்
வால்பாறை: வால்பாறையில், அரசு அலுவலகங்கள் கார் பார்க்கிங் செய்யும் இடமாக மாறி வருகின்றன. வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியில், தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். வால்பாறை நகரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளதால், வயதானவர்கள் ஆட்டோ, வேன்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், வால்பாறை தாலுகா அலுவலகத்தை சுற்றியும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தாலுகா அலுவலகத்துக்கு வரும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் அதிகளவிலான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்துகின்றனர் . கடந்த சில நாட்களாக நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. அரசு அலுவலக வளாகத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.