| ADDED : டிச 02, 2025 06:44 AM
சூலுார்: சூலுார் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், ராவத்தூரில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தவப்பிரகாசம் பேசியதாவது: தென்னை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள், நாட்டு ரக தென்னைகளையே தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் தான் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளது. ஹைபிரிட் ரகங்களை காட்டிலும் நல்ல பலன்களை தரும். மேலும், மண் பரிசோதனை செய்த பின், அதற்கேற்ப உரங்கள் இடுவது அவசியம். தென்னைகளுக்கு உரமிடும் போது, அடிப்பகுதியில் இருந்து நான்கு அடி தள்ளி உரங்களை இட்டால் போதுமானது. தினமும் நீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை. மரத்தின் கீழ் உள்ள ஈரப்பதத்தை பார்த்து, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடலாம். மட்டைகளை அரைத்து நேரடியாக போடுவதில் பலன் இல்லை. அவற்றை மக்க வைத்து இட்டால் பலன் கிடைக்கும். நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த மேலாண்மை திட்டத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.