கோவை: கோவை மாநகராட்சியில், 1,250 ஆண் துாய்மை பணியாளர்கள், 696 பெண் துாய்மை பணியாளர்கள் என, 1,946 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, தைப்பொங்கல் பண்டிகை சமயங்களில், தலா ஒரு செட் சீருடை, தலைப்பாகை, செருப்பு, தையல் கூலி மாநகராட்சி நிதியில் வழங்கப்படும். கோ-ஆப்டெக்ஸ், காதி கிராப்ட், தேசிய பஞ்சாலைக்கழகத்தில் விலைப்புள்ளி பெற்று, கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு துாய்மை பணியாளருக்கும் முக கவசம், கையுறை, தொப்பி, மிளிரும் ஜாக்கெட், கம்பூட்ஸ், கட் ஷூ, பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதற்காக, 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களையும், சீருடைகளையும் விரைந்து கொள்முதல் செய்து, தைப்பொங்கல் திருநாளுக்கு முன் வழங்க சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஒப்பந்த நிறுவனம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.