பெ.நா.பாளையம்: வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் திட்ட குழுமத்தால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு வீரபாண்டி ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் ஆனைகட்டி மலைப்பகுதியில் உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி பெறாமல், விவசாய பூமியை மாற்றம் செய்யாமல், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து உரிய ஆவணங்களை, உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென ஆனைகட்டி வட்டாரம் மற்றும் வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 14 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, வீரபாண்டி ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,' சின்ன தடாகம் வட்டாரத்தில் வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த, 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பூட்டி, சீல் வைக்கப்பட்டு, மின்சார துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சின்னதடாகம் மற்றும் வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புற்றீசல் போல் ரிசார்ட், கட்டடங்கள் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. இவர்களில் பலர் உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி மட்டுமே பெற்றுள்ளனர். உள்ளூர் திட்ட குழும அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த ரிசார்ட்டுகளில் வார விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கானோர் கூடுகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள ஆனைகட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் கூடிய பிரம்மாண்ட ராட்சத, மின்சார விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் இசை கருவிகளை இசைப்பதால், வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிகளில் இயக்கப்படும் ரிசார்ட்டுகள் மற்றும் ஓட்டல்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றனர். வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரிசார்ட் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனி அலுவலர் அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்டட உரிமையாளர்கள் வனத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை ஆகியோரிடம் இருந்து தடையின்மை சான்றுகள், கோயம்புத்தூர் உள்ளூர் திட்ட குழுமத்தால் திட்ட அனுமதி பெறப்பட்ட விவரம், கட்டட வரைபட அனுமதி நகல் ஆகியவற்றை அறிவிப்பு பெற்ற நாளில் இருந்து, 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு திட்ட சட்டங்களின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மேலும் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்படும் என்றும், எவ்வித ஆவணங்களும், அனுமதி தொடர்பான சான்றுகள் ஒப்படைக்கப்படாவிட்டால், ரிச்சார்ட்கள், கட்டடங்கள் பூட்டி, சீல் வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.