24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்பு பணி விறுவிறு
கோவை: கோவை மாநகராட்சியில், 60 வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வ.உ.சி. பூங்கா அருகே மேல்நிலை தொட்டி கட்டப்படுகிறது. இதற்கு பாரதி பார்க் தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம், பார்க் கேட் வழியாக குழாய் பதித்து கொண்டு வர வேண்டும். பிரதான ரோடுகளில் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே இணைப்பு கொடுக்க வேண்டியுள்ளது. புதிய செம்மொழி பூங்காவுக்கு எதிரே, ரோட்டை தோண்டி குழாய் இணைப்பு மற்றும் வால்வு பொருத்தும் பணி நேற்று துவக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, '24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் துரிதமாகநடந்து வருகின்றன. வ.உ.சி. பூங்கா தொட்டிக்கு தண்ணீர் தருவதால், சுற்றுப்பகுதியை சேர்ந்த 3,000 வீடுகளுக்கு 24மணி நேரமும் சப்ளை செய்ய முடியும். விடுபட்ட இடங்களில் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. வடகோவை மேம்பாலத்துக்கு கீழ், இணைப்பு கொடுக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே இணைக்கும் வகையில் லங்கா கார்னர் பகுதியிலும், அல்வேர்னியா ஸ்கூல் பகுதியிலும் குழாய் பதிக்க வேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி கொடுத்து விட்டால், இரண்டு மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடலாம்' என்ற னர்.