பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர்; மக்கள் குழப்பம்
மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்யாத நிலையில், பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வருவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு இரண்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில், திறந்து விடும் தண்ணீரில் கோவை மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்டம், உள்பட பல்வேறு ஊர்களுக்கு, 19 குடிநீர் திட்டங்களுக்கு, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. பொதுவாக பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை பெய்யும் பொழுது, காட்டாறு வெள்ளத்தால், பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வரும். அப்போது தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கு அறிவிப்பு வழங்கும். ஆனால் தற்போது நான்கு நாட்களாக, பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பவானி ஆற்றில் எதனால் தண்ணீர் செந்நிறத்தில் வருகிறது. பில்லூர் அணையை இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்வதால் தான் தண்ணீர் செந்நிறத்தில் வருகிறதா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பில்லூர் அணை மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பில்லூர் அணைக்கு குந்தா நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வருகிறது. குந்தா அணையில் சேரும் சகதியும் நிறைந்து இருந்ததால், தேக்கி வைக்கப்படும் தண்ணீரின்அளவு குறைந்தது. அதனால் அதிகாரிகள், அணையில் இருந்து சேரும் சகதியுடன் தண்ணீரை முற்றிலுமாக வெளியேற்றினர். இந்த சேறு கலந்த செந்நிறத்தில் தண்ணீர், முள்ளி மலைப்பகுதி வழியாக, பில்லூர் அணைக்கு வந்தது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீரை, பவானி ஆற்றில் திறந்து விடும் பொழுது, அந்த தண்ணீரும் செந்நிறத்தில் உள்ளது. இன்னும் இரண்டு நாளில் தண்ணீர் தெளிந்து நல்ல தண்ணீராக ஆற்றில் வரும். மேலும் பில்லூர் அணையில் சேரும், சகதியும் நிறைந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் அளவு உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்படும், தண்ணீரின் அளவும், குறைந்து கொண்டே வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் தொலைநோக்கு பார்வையுடன், பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பில்லூர் அணையில் உள்ள சேறு, சகதியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.