பொள்ளாச்சி: கோவை கோட்டத்தில் இயக்கப்படும் அரசு டவுன் மற்றும் புறநகர் பி.எஸ் - 5 மற்றும் 6, எ.எல்.எப்., பஸ்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த நேரத்துக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பயணியர், டிரைவர், கண்டக்டர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, மேட்டுப்பாளையம், கோவை தலைமையகம், உப்பிலிபாளையம், அன்னுார், கருமத்தம்பட்டி, சூலுார், ஒண்டிப்புதுார் 1, 2, சுங்கம், 1,2, உக்கடம் 1, 2, மருதமலை, பொள்ளாச்சி 1, 2, 3 மற்றும் வால்பாறை என, 17 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, பஸ்களை பராமரிக்க போதிய மெக்கானிக் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பஸ்கள் பழுதுடனேயே இயக்கப்படுவதால், ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்படுகிறது. தவிர, சில வருடங்களாக, டிரைவர்கள் பற்றாக்குறையும் உள்ளது. சில, பணிமனைகளில் பணியாற்றிய டிரைவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு பதிலாக நன்கு பயிற்சி பெற்ற புதிய டிரைவர்கள் நியமனம் செய்யப்படாமலும் உள்ளது. அதற்கு மாற்றாக, தற்காலிக டிரைவர்கள் வாயிலாக பஸ்களை இயக்குவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளிலும் இத்தகைய பிரச்னை நிலவுகிறது. சமீபத்தில், முறையான பயிற்சி இல்லாமல் தற்காலிக டிரைவர் ஒருவரால் இயக்கப்பட்ட பஸ், திருப்பத்துாரில் விபத்துக்குள்ளாகி, 11 பேர் இறந்தனர். அதன்பேரில், கோவை கோட்டத்தில், பி.எஸ் -5, பி.எஸ் -6, எ.எல்.எப்., பஸ்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் பஸ்களில் அதிகபட்சம், 80 கி.மீ., ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த வேகம், 70 கி.மீ., எனவும், டவுன் பஸ்களில், 60 கி.மீ.,ல் இருந்து, 50 கி.மீ., வரையும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒவ்வொரு ஊர்களிலும் வேகம் குறைவாக இயக்கப்படும் அரசு பஸ் காரணமாக, பயணியர் அதிருப்தி அடைந்து வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை கூடுதல் பிரச்னையை உண்டாக்குகிறது. குறித்த நேரத்துக்கு பயணியர் சென்றடைய முடிவதில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் 'டிரிப்' நேரத்துக்கு பஸ் இயக்க முடிவதில்லை என, புலம்புகின்றனர். இது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது:
விபத்து, டீசலை மிச்சப்படுத்தும் வகையில் பஸ்களின் வேகம் 70, 50 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் இயக்க இயலாத வகையில், இன்ஜின்களில் 'ஸ்பீட் லாக்' பொறுத்தப்பட்டுள்ளது. எனவே, தொலைதுாரத்திற்கு பஸ்களை இயக்கும்போது, எந்தவொரு ரோட்டிலும் வேகத்தை கூட்ட முடியாது. குறிப்பாக, ஏதேனும் ஒரு வாகனத்தை உடனே முந்திச் செல்ல முடியாது. ஏற்கனவே, அரசு பஸ்சில் பயணித்தால் நேரம் அதிகரிப்பதாக கூறும் பயணியர், வேகம் காட்டும் தனியார் பஸ்களில் செல்லவே ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு இருக்கையில், அரசு பஸ்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணியர் வாக்குவாதம் செய்கின்றனர். வருவாய் இழப்பும் அதிகரிக்கும். இவ்வாறு, கூறினர்.
மறு பரிசீலனை செய்யணும்!
பஸ்சின் வேகத்தை குறைந்து, எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பது நியாயம் இல்லை. பஸ் இயக்கும் டிரைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் உடல்நலன் மீது கவனம் செலுத்த வேண்டும். 60 கி.மீ., மேல் பஸ்சின் வேகத்தை கூட்ட முடியாது என்பதை அறிந்து, டென்ஷன் ஆகாமல் இருத்தல் வேண்டும். சிறப்பு பஸ் இயக்கத்தை தவிர்க்க வேண்டும். தற்காலிக டிரைவர்கள் பயிற்சி இல்லாமல் விபத்து ஏற்படுத்தினால், நிரந்தர பணியாளர்கள் பொறுப்பை ஏற்க முடியாது. பஸ்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், தற்போதைய நடைமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும், என, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.