உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டுவது அதிகரிப்பு மாநகராட்சி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு

அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டுவது அதிகரிப்பு மாநகராட்சி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு

கோவை: கோவையில், அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக, மண்டல தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கோவை மாநகராட்சி பகுதியில், எந்தவொரு கட்டடங்கள் கட்டுவதாக இருந்தாலும் மாநகராட்சி அல்லது நகர ஊரமைப்பு துறையில் வரைபட அனுமதி பெற வேண்டும். சமீபகாலமாக அனுமதிக்கு மாறாக கட்டடங்கள் கட்டுவதும், சில இடங்களில் அனுமதியே பெறாமல் கட்டடங்கள் கட்டுவதும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அனுமதிக்கு மாறாக கட்டும் கட்டடங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து விட்டு, சட்ட விரோத கட்டுமானத்தை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கூறுகையில், ''24வது வார்டு பி.ஆர்.புரம் சாஸ்திரி நகரில், 10 சென்ட் இடத்தில், 8 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது வணிக நோக்கில் ஒவ்வொரு தளத்திலும் 11 அறைகள் வீதம், 33 அறைகள் கொண்ட மகளிர் விடுதி கட்டப்படுகிறது. தற்போது நான்காவது தளம் மற்றும் பார்க்கிங் பகுதி கட்டும் பணி நடக்கிறது. 20 அடி சாலையே இருக்கிறது. விதிமீறல் அபராத கட்டணமாக ஏழு லட்சம் ரூபாய் செலுத்தி விட்டதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். அபராதம் செலுத்தி விட்டால், விதிமீறலை அனுமதிக்கலாமா,'' என்றார். வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறுகையில், ''மாநகராட்சி பகுதியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. விதிமீறலுக்கான கட்டணம் செலுத்தி விட்டு, சொத்து வரி புத்தகம் போடுகின்றனர். பெரிய கட்டடங்கள் கட்டும்போது, போதுமான அளவு பக்கத்திறவிடம் விடுவதில்லை. 'பார்க்கிங்' வசதி செய்து கொடுப்பதில்லை. குறுக்கு வீதிகளில் மூன்று தளம், நான்கு தள கட்டடங்கள் கட்டுகின்றனர். வாகனங்கள் சென்று வர முடிவதில்லை. பதிவு பெற்ற பொறியாளர்களில் சிலர், பொதுமக்களை தவறாக வழி நடத்துகின்றனர்,'' என்றார்.

'லாக் அண்டு சீல்' வைக்கப்படும்

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு மாநகராட்சியில் இருந்து சொத்து வரி போடுவதில்லை. அவற்றை 'லாக் அண்டு சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய சான்றளிப்பு திட்டத்தில் எளிதாக வரைபட அனுமதி பெறலாம். அதற்கான வழிமுறை தேவைப்பட்டால் உதவி செய்யப்படும். அனுமதியின்றி கட்டடம் கட்டியிருக்கும் தகவல் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ