| ADDED : டிச 07, 2025 07:23 AM
வடவள்ளி: நவாவூர் பிரிவு கணுவாய் சாலையில் உள்ள பொத்தல்களால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மருதமலை ரோடு, நவாவூர் பிரிவிலிருந்து கணுவாய் செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில், அண்ணா பல்கலை வளாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளதால், இச்சாலையிலும், தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில், மாநகராட்சி சார்பில், கடந்த ஓராண்டுக்கு முன் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக சாலையில் குழிதோண்டி குழாய் பதிக்கப்பட்டது. சாலை முழுவதும் சேதமடைந்து பொத்தலானது. இந்த குண்டும் குழியுமான சாலையில், தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். ஓராண்டிற்கு மேலாக சேதமடைந்துள்ள நிலையிலும், மாநில நெடுஞ்சாலைத்துறையினர், சாலையை புதுப்பிக்காமல் உள்ளனர். இதன் காரணமாக, இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.