பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம்: வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், மலைகளுக்கு இடையே, 100 அடி உயரத்திற்கு பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி மாவட்டம், வட கேரளம் ஆகிய பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வினாடிக்கு, 3211 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 19ம் தேதி இரவு அணையின் நீர்மட்டம், 88 அடியாக இருந்தது. 12 மணி நேரத்தில் நான்கு அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து, நேற்று காலை, 92 அடியை எட்டியது. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.