கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், 5 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் ஒப்புதலோடு, இவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கிய கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்படுகிறது. படிவத்தை சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் மட்டுமே, வரைவு பட்டியலில் இடம் பெறும் என மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டை ஓட்டுரிமை பெற்றிருந்தவர்கள் விவரம் தனியாக சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 861 வாக்காளர்கள் இறந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. முகவரி மாறியவர்கள், இரட்டை ஓட்டுரிமை மற்றும் கண்டறிய முடியாதவர்கள் வகையில் மூன்று லட்சத்து, 92 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் ஐந்து லட்சத்து ஆறாயிரத்து 394 வாக்காளர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது படிவம் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. இப்பட்டியலை தனியாக தயாரித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கணக்கெடுப்பு படிவம் திரும்பப் பெற, வரும் 11ம் தேதி கடைசி நாள். அதன்பின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய உள்ள வாக்காளர் பெயர்கள் இறுதி செய்யப்பட உள்ளன.
பெயர்கள் நீக்கப்படும்
தே ர்தல் பிரிவினர் கூறுகையில், 'தொகுதி வாரியாக இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் பட்டியல் தயாரித்து கட்சியினரிடம் வழங்கியுள்ளோம். இரண்டு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. பட்டியலில் கட்சி பிரதிநிதிகள் கையெழுத்திட்டுக் கொடுத்ததும், பெயர்கள் நீக்கப்படும். சம்பந்தப்பட்ட முகவரியில் வாக்காளர்கள் வசிப்பதாக, கட்சி ஏஜன்டுகள் கூறினால், மீண்டும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும். அம்முகவரியில் வாக்காளர்கள் வசித்தால், அதே இடத்தில் பெயர் சேர்க்கப்படும். வேறிடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தால், புதிய முகவரிக்கு படிவம் 6 பெற்று, அந்த பகுதியில் பெயர் சேர்க்கப்படும்' என்றனர்.