| ADDED : டிச 02, 2025 06:36 AM
பொள்ளாச்சி: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். தமிழகத்தில், கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 8,370 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 5,200 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்படுகிறது. ஒரே வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு, வேறு அடிப்படை ஊதியங்களை அரசு வழங்குவது பெரும் பிரச்னைக்கு உள்ளானது.இதை கண்டித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக தி.மு.க. 311வது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நேரத்திலும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், விரக்தியடைந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மூன்று கட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளது. பொள்ளாச்சி தெற்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் வட்டாரச் செயலாளர் அருண்குமார் கூறியதாவது: ஒரு பணிக்கு இரண்டு அடிப்படை ஊதியங்கள் இருக்க கூடாது. அது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. அதேபோல தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இன்றுவரை அதைச் செய்யவில்லை. எனவே, மூன்று கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். பொதுவாக ஆசிரியர்கள் மீது அதிக சம்பளம் கேட்டுப் போராடுவர் என்ற விமர்சனம் உண்டு. ஆனால் இங்கே சம ஊதியம் தாருங்கள் என்று தான் நாங்கள் போராடி வருகிறோம்.உயரிய உயர்வு வேண்டாம், உரிய ஊதியமே போதும் என்பதே எங்களது கோரிக்கை. எனவே, இன்று (நேற்று) முதல் கோரிக்கையை அட்டை அணிந்து பணிபுரிவது எனவும், 5ம் தேதி கோட்டை நோக்கிய பேரணி நடத்துதல் என்றும் முடிவு செய்துள்ளோம். அதன் பின்பும் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், 24ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு, கூறினார்.