உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நாட்டின் சராசரி அளவை விட கடலுாரில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் கலெக்டர் தகவல்

 நாட்டின் சராசரி அளவை விட கடலுாரில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் கலெக்டர் தகவல்

கடலுார்: உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆட்டோ வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் வழங்கல், கையெழுத்து இயக்கம் மற்றும் கலைப்பயண நிகழ்ச்சி துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, உறுதிமொழி எடுத்து கொண்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது; தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மையக்கருத்தினை வெளியிட்டு வருகின்றது. அதன்படி இந்தாண்டு, இடையூறுகள் கடந்து எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடர்பான எதிர் வினைகளை மாற்றுதல் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றின் பரவலானது இந்திய அளவில் 0.21 சதவீகிதமும், தமிழ்நாட்டில் 0.18 சதவீகிதமும், கடலுார் மாவட்டத்தில் 0.22 ச தவிகிதமாக உள்ளது. எனவே, கடலுார் மாவட்டத்தில் எச்.ஐ.வி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 கலைக்குழுக்கள் மூலம் கிராமப்பகுதிகளில், நாளொன்றுக்கு இரண்டு நிகழ்ச்சிகள் வீதம் 10 நாட்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மாவட்டத்தில் 3 ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள், 24 பால் வினை சிகிச்சை மையங்கள், 7 இணைப்பு ஏ.ஆர்.டி. கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள், 5 அரசு ரத்த மையங்கள், 2 தனியார் ரத்த மையம், 2 இலக்கு மக்களுக்கான திட்டம், 1 இளைப்பாறும் மையம், 1 டான்சாக்ஸ் சி.எஸ்.சி., திட்டம் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் தொடர் சிகிச்சையான ஏ.ஆர்.டி கூட்டு மருந்தை உட்கொள்வதாலும், ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வதால், தங்களது வாழ்நாட்களை நீட்டித்துக்கொள்வதோடு தங்களது குழந்தைகளை பாதுகாக்கவும், தங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், திட்ட மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் கதிரவன், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா, ஏ.ஆர்.டி முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், மாவட்ட எச்.ஐ.வி உள்ளோர் சங்கம் தலைவர் ராஜேஸ்வரி, ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ