உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அட்டூழியம் : மைதானத்தில் இருந்த 19 மரங்கள் வெட்டி சாய்ப்பு...: பா.ம.க., வினர் சவ ஊர்வல ஒப்பாரி போராட்டம்

 அட்டூழியம் : மைதானத்தில் இருந்த 19 மரங்கள் வெட்டி சாய்ப்பு...: பா.ம.க., வினர் சவ ஊர்வல ஒப்பாரி போராட்டம்

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாகங்கள் கட்டும் பணிக்காக 19 மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., மற்றும் பசுமைத் தாயகம் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தை 35 கோடி ரூபாயில் மேம்படுத்தும் திட்டத்தை, கடந்த பிப்ரவரியில் கடலுார் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மிகவும் வரலாற்று புகழ்பெற்ற மஞ்சக்குப்பம் மைதானம் 35 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அண்ணா விளையாட்டரங்கம், மணிமண்டபம், பூங்கா, நுாலகம் கட்டியது போது தற்போது 15 ஏக்கர் திறந்த வெளியாக உள்ளது. அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அரங்குகள், பசுமையான நகர்ப்புற சூழ்நிலைகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி வணிக வளாகங்கள் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. கடற்கரையோர சாலை பகுதியில் கடைகள் கட்டும் பணி முடிந்து, பழைய கலெக்டர் அலுவலக சாலையில் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நேற்று முன்தினம் புயல் மழையையொட்டி மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையோர கடைகள் கூட இல்லை. இதை பயன்படுத்திக்கொண்ட கும்பல் இரவோடு இரவாக 19 மரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது. நேற்று அவ்வழியாக சென்ற பொதுமக்கள், மைதானத்தில் இருந்த மரங்களை வெட்டி விசாலமாக காட்சியளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், பசுமைத்தாயக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பழைய கலெக்டர் அலுவலக சாலையில் வெட்டப்பட்ட மரத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த புதுநகர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மரங்கள் வெட்ட கலெக்டர் உத்தரவு கொடுத்திருப்பதாக கூறினர். ஆனால் உத்தரவை காண்பிக்கவில்லை. இதில் சமாதானம் அடையாத பா.ம.க.,வினர், மரத்தை ஊர்வலம் போல எடுத்துச்செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பால் ஊற்றி, பெண்கள் ஒப்பாரி வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஏராளமான பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடைகளால்

குறுகி வரும் மைதானம்

கடலுார் மாநகர மக்களின் வரபிரசாதமாக மைதானம் உள்ளது. மைதானத்தில் காலை மாலை நேரத்தில் வயதானவர்கள் இயற்கை காற்று வாங்கி மனதார வாய்விட்டு பேசி பொழுதை கழித்து வந்தனர். தற்போது மாநகராட்சி மைதானத்தை, வணிக வளாகமாக மாற்றி வருகிறது. இதனால் பெரிய அளவிலான பொதுக்கூட்டம், அரசியல் மாநாடு நடத்துவதற்கு ஏற்ற இடமாக இருந்த மைதானம் தற்போது குறுகிவிட்டது. மைதானத்தின் நாலாபுறமும் கடைகளால் அடைபட்டுவிட்டதால் மைதானம் கலையிழந்து வருகிறது. மேலும் அதிகளவு கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமாக இருந்ததால் இதுவரை அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்ததில்லை. இனி பரந்த இடமும் குறுகி வருவதால் மீண்டும் கரூர் சம்பவம் போல் ஏற்பட்டு விடக்கூடாது என கடலுார் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மரங்கள் வெட்டிசாய்ப்புக்கு கண்டனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி