உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தமிழ் வளர்த்த சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி 160 ஆண்டுகளாக தொடரும் சாதனை பயணம்

 தமிழ் வளர்த்த சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி 160 ஆண்டுகளாக தொடரும் சாதனை பயணம்

கல்வி என்பது புத்தக அறிவை வழங்குவது மட்டுமின்றி, மொழி, மரபு, ஒழுக்கம் மற்றும் ஒளியையும், மனிதனுக்குள் ஏற்றும் தீபமே என கூறியவர் ஆறுமுக நாவலர். அவரது கோட்பாட்டை செயல்படுத்தும் வகையில், சிதம்பரத்தில் 1864ல் ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலையை துவக்கினார். படிப்படியாக ஆறுமுக நாவலர் மேல்நிலை பள்ளி யாக உயர்ந்துள்ளது. 160 ஆண்டுகளை கடந்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, கருணை மற்றும் மனிதநேயத்தை பயிற்றுவித்து, சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது. 4 தலைமுறைகளாக இப்பள்ளியில் படித்து, தற்போதைய தலைமுறையும் இப்பள்ளியில் படிக்கும் பல குடும்பத்தினர் உள்ளனர்.

Galleryஆரம்ப காலத்தில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி முக்கிய பள்ளியாக ஆறுமுக நாவலர் திகழ்ந்துள்ளது. இப்பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்று சமூகத்தில் உயர்ந்த பணி செய்யும் பொறுப்பினையும் பெற்றுள்ளனர். கடந்த, 1864 ல், 7 ஆசிரியர்களோடு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம், இன்று 18 அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியர்கள், 18 பெற்றோர் நியமன ஆசிரியர்கள் மற்றும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ளது. துவக்கத்தில், 4 வகுப்பறைகள் இருந்த நிலை மாறி, தற்போது 24 வகுப்பறைகள் உள்ளன. இதில் ஒரு மைய வளாகம்,2 கம்ப்யூட்டர் அறை,2 திறன் அறைகள், மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி கழிப்பறைகள், சுத்தமாக குடிநீர் என பல்வேறு வசதிகள் உள்ளன. தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், ரோட்டரி இயக்கம், பசுமை இயக்கம் என சமுதாய நோக்கில் மாணவர்களை நெறிப்படுத்தும் இயக்கங்கள் பள்ளியில் உள்ளன. சிதம்பரம் நகர, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அரசு நடத்தும் கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி கண்ட மாணவ, மாணவிகள் அதிகம். இதுமட்டுமின்றி, இஸ்ரோ போன்ற அமைப் போடு இணைந்து நடத்தும் விஞ்ஞான அறிவியல் கண்காட்சிகளில், தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி பரிசு வென்றுள்ளனர். துவக்க கால தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் துவங்கி, தற்போதைய பள்ளி செயலாளர் டாக்டர் அருள்மொழிசெல்வன், தலைமை ஆசிரியர் ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகளை கல்வி மட்டுமின்றி ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக உருவாக்கி வருகின்றனர்.

மாணவ, மாணவிகளை

நல்வழிப்படுத்துவதே தாரக மந்திரம்

1962ம் ஆண்டு முதல் ஆறுமுக நாவலரில் பள்ளி படிப்பையும், அதன் பின்பு மருத்துவம் பயின்று டாக்டராகவும் இருந்து வருகிறேன். பள்ளி செயலாளராக, தலைவர் பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பள்ளியை வழி நடத்தி வருகிறோம். 750 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், வகுப்பறைகள், அறிவியல் கூடங்கள் பள்ளியில் பல்வேறு வசதிகள் உள்ளன. நான் படிக்கும் காலத்திலே இருப்பது போல, அல்லாமல் தற்சமயம், அரசு உதவி பெறும் பள்ளியாக மாறி இருப்பதால் அரசின் அனைத்து விலையில்லா பொருட்களும், அரசு பாடத்திட்டங்களும் தகுந்த ஆசிரியரால் நடத்தப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் கட்டமைப்புகளை ஆறுமுக நாவலர் அறக்கட்டளை செய்து தருகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளை, ஒழுக்கத்துடன் நல்வழியில் கொண்டு செல்வதே தாரக மந்திரமாக பள்ளி செயல்பட்டு வருகிறோம். - டாக்டர். அருள்மொழிச்செல்வன், பள்ளி செயலாளர்.

நான்கு தலைமுறைகளாக படிக்கிறோம்

ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலையில் கடந்த 1941ம் ஆண்டு முதல் 1945 வரை, 1 முதல் 5 ம் வகுப்பு வரை படித்தேன். தினமும் காலை 8:30 மணிக்கு நடுமன்றத்தில், மாணவர்கள் இறை வணக்கம். செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தேவாரம் பாடசாலையில் இருந்து, ராமலிங்க ஓதுவார், 9:00 மணி வரை தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். 3ம் வகுப்பில் இருந்து சைவ வினா விடை, பாலபாடம் போன்ற வாழ்க்கை நெறி சார்ந்த பாடல்களுடன் பள்ளி துவங்கும். எங்களுக்கும் - பள்ளிக்கும் அதிக நெருக்கம் உண்டு. காரணம், எங்கள் குடும்பம் 4 தலைமுறைகளாக ஆறுமுக நாவலர் பள்ளியில் பயின்று வருகின்றோம். 1 மற்றும் 2 ம் வகுப்பு ஆசிரியர்கள், பத்தர் வாத்தியார், சந்திரசேகர் ஆகியோரை இன்றும் வணங்குகிறேன். பள்ளியின் சிறப்பிற்கு, எங்கள் தலைமை ஆசிரியாக பணியாற்றிய சாமிநாதன்தான். அவர் வந்த பின் தான், வித்யாசாலை பள்ளிக்கூடமானது. ஆரம்பக் கல்வி பெற்றபின், 85 வயது வரை அண்ணாமலை பல்கலையில் பல பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றேன். - ரங்காச்சாரி, முன்னாள் மாணவர், சிதம்பரம்

நெஞ்சம் இனிக்கிறது

ஒன்றரை நுாற்றாண்டை கடந்த ஆறுமுக நாவலர் பள்ளியில் படித்ததே மிக பெருமையானதும், வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளத் தகுந்ததாகும். திறமை மிகுந்த ஆசிரியர்கள், பாடப்புத்தகத்திற்கு வெளியேயும், எங்களை வாசிக்க கற்று தந்தவர்கள். அறம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் எங்கள் மனதில் விதை விதைத்தவர்கள் என் வகுப்பு தோழர்கள் பலர் சமூகத்தின் பல்வேறு பணிகளில் உயர்ந்து நிற்க அடித்தளம் இட்டவர்கள் அவள்களே. பல எழுத்தாளர்களும், ஆற்றல்மிகு பேச்சாளர்களையும் உருவாக்கிய எங்கள் பள்ளி காலத்தை, இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது. சமூகத்தின் பல துறைகளிலும், பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க, பள்ளியின் கட்டமைப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே காரணம். -சீனி மோகன், முன்னாள் மாணவர்

அது ஒரு பொற்காலம்

எங்கள் பள்ளி குறித்து சொல்வதென்றால் ஒன்றே ஒன்று தான், இன்றைய எனது உயர்வுக்கு என் ஆறுமுக நாவலர் பள்ளி மட்டுமே காரணம். நான் படித்த காலம் ஒரு பொற்காலம். தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் வழிகாட்டுதலில், பணிபுரிந்த அத்துனை ஆசிரியர்களும், எங்களுக்கு படிப்பு மட்டுமின்றி, வாழ்வை எதிர்கொள்ள நல் ஒழுக்கம், நற்சிந்தனை போதித்த தெய்வங்கள். அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம். -வாசுதேவன் முன்னாள் தலைமை கண் மருத்துவர், மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.

ஒழுக்கத்தை

கற்றுக்கொடுத்த பள்ளி

கடந்த, 1963ம் ஆண்டு, நாவலர் பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்ந்து, 10ம் வகுப்பு வரை படித்தேன். மிகச்சிறந்த தலைமை ஆசிரியர் சுவாமிநாதன், தலைமையில் இருந்த அப்பள்ளி, சிதம்பரத்தின் சிறந்த பள்ளியாக விளங்கியது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்தலில், மிகவும் கண்டிப்பான தலைமை ஆசிரியர். பள்ளியில் இருந்து வீட்டிற்கு கிளம்பும் போது ஒவ்வொரு வகுப்பாக, வரிசையாகவும், அமைதியாகவும் வெளியில் வருவோம். அதை இன்று நினைத்தாலும் பெருமையாக உள்ளது. 10ம் வகுப்பில், சிறந்த மதிப்பெண் பெற்று, அண்ணாமலை பல்கலைகழத்தில் பயின்றேன். பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதனோடு, அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருந்தேன் என்பதே எனக்கு பெருமை. தற்போது அவரது மகன் பள்ளி செயலாளராக இந்து வழி நடத்துவது மகிழ்ச்சி. -மூசா, முன்னாள் மாணவர், சிதம்பரம் ேஹாட்டல் சங்க தலைவர்

அர்ப்பணிப்போடு

இருப்பதே பாக்கியம்

என் பள்ளியில், கல்வி, கலை, அறிவியல், மற்றும் விளையாட்டு போன்ற பன்முகத் திறமைகளோடு மாணவர்களை உருவாக்கி வருகிறோம். மாதா,பிதா, குரு,தெய்வம் என்பது போன்று நல்லொழுக்கம், நன்னடத்தை, ஆரோக்கியம், கல்வி என்ற நான்கு படிநிலைகளை தாரக மந்திரமாக கொண்டு வழி நடத்தி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிதம்பரம் நகரில் முதலிடம் பெற்று வருகிறோம். கலைத்திருவிழா அறிவியல் மற்றும் விளையாட்டு சார்ந்த பல போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவில் பங்கு பெற செய்து வருகிறோம். கொரோனா தொற்று காலங்களில் என் பள்ளியின் அனைத்து ஆசிரியர் களும் மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று கல்வியோடு அவர்களுக்கு வேண் டிய நிதி மற்றும் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கி மாணவர்களுக்காக அர்ப்பணிப்போடு இருந்ததை பாக்கியமாக கருதுகிறோம். -சுமதி. முதுகலை ஆங்கில ஆசிரியர்

கற்பக விருட்சமாக

உயர்ந்து நிற்கிறது

ஆறுமுக நாவலர் நிறுவிய சைவ பிரகாச வித்யாசாலை எனும் பாடசாலை, கற்பக விருட்சம் போல் இன்று உயர்ந்து நிற்கிறது. கல்வி கற்பது மட்டுமின்றி, அறநெறி பண்புகளை வளர்க்கும் இடமாக விளங்கி வருகிறது. பள்ளி கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆறுமுக நாவலர் அறக்கட்டளை செய்து கொடுக்கிறது. இந்தாண்டு, புதிதாக 6 வகுப்பறைகள், ஆய்வகம், நவீன கழிவறை, விளையாட்டு மைதானம் என பல விஷயங்களை பள்ளி செயலர் முயற்சித்து செய்துள்ளார். கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி முதலிடம் பெற்றது என் பள்ளி ஆசிரியர்களின் சீரிய முயற்சியாகும். முன்னாள் தலைமை ஆசிரியர் சுவாமிநாதன், தமிழக அரசு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் பாராட்டு சான்றிதழ், தமிழக அரசு விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதும் ஒரே ஆண்டில் பெற்றது பள்ளிக்கும், எங்களை போன்ற முன்னாள் மாணவர்களுக்கும் மணி மகுடமாகும். - ராம்குமார், தலைமை ஆசிரியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ