| ADDED : டிச 07, 2025 06:44 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, வடிகால் வாய்க்கால்களில் உலவும் முதலைகளால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே விளக்கப்பாடி ஏரியின் வடிகால் வாய்க்கால் தட்டானோடை, தர்மநல்லுார், சின்னநற்குணம், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், சின்னகுப்பம், ஆணைவாரி ஓடைக்கு வந்தடைந்து, வெள்ளாறுராஜன் வாய்க்காலுக்கு சென்றடைகிறது. கடந்த இரு வாரங்களாக பெய்த கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து உபரி நீரை வெள்ளாற்றுக்கு அனுப்பி வந்தனர். அணைக்கரையிலிருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரில், முதலைகள் வெள்ளாறு, வடிகால் வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகளில் தஞ்சம் புகுந்துள்ளன. இந்நிலையில் நேற்று காலை தர்மநல்லுார், தட்டானோடை விவசாயிகள் வயலுக்கு சென்ற போது, வாய்க்கால் கரையில் இருந்த மூன்றடி நீளமுள்ள முதலை குட்டியை கண்டு அச்சமடைந்தனர். இது குறித்து சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் வந்து வாய்க்காலில் தேடிப்பார்த்தபோது முதலை இல்லாததால் திரும்பி சென்றனர்.