மழைநீரில் மூழ்கும் சுரங்கப்பாதைகள்; திட்டமிடாத பணியால் மக்கள் தவிப்பு
ஆளில்லா ரயில்வே கேட்டுகளால் பொது மக்கள், கால்நடைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதைகள் போடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்காமல், விபத்துகளும் தவிர்க்கப்பட்டன.அதன்படி, திருச்சி - சென்னை, விருத்தாசலம் - சேலம், விருத்தாசலம் - கடலுார் மார்க்கங்களில் செம்பளக்குறிச்சி, வயலுார், எருமனுார், குப்பநத்த நல்லுார் உட்பட பல்வேறு கிராமங்களில் சுரங்கப்பாதைகள் போடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடல் இல்லாமல் அவசர கதியில் போட்டு முடிக்கப்பட்டன.குறிப்பாக, செம்பளக்குறிச்சி ரயில்வே கேட்டில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விளைநிலங்கள் வழியாக ஏரிக்கு மழைநீர் வழிந்தோடும் பிரதான வடிகால் அருகே சுரங்கப்பாதை போடப்பட்டது. இதனால் மழை காலங்களில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி, குளம்போல மாறிவிடும்.அப்போது கவணை, சித்தேரிகுப்பம், மாத்துார், செம்பளக்குறிச்சி, பண்டாரங்குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 10 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கின்றனர்.தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் சுரங்கப்பாதையில் மழைநீர் வடியும் பகுதியை சீரமைக்க வேண்டும். மேலும் மழைநீர் சூழ்ந்தால் அதனை உடனுக்குடன் அகற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.விரைவில் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் மழைநீர் தேங்கினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ரயில்வே மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.