| ADDED : நவ 14, 2025 04:51 AM
மாவட்டத்தை பொறுத்தமட்டில் மலைப்பகுதி, ஆன்மிகம், சுற்றுலாத்தலங்கள் நிறைந்துள்ளன. நகர் பகுதி தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை உயர் மின்னழுத்த பாதை, தாழ்வழுத்த மின் பாதைகள் பிரிக்கப்பட்டுள்ளன.இவற்றில் தொலைதுாரப் பகுதிகளுக்கு செல்லும் மின்பாதைகளுக்கான மின்கம்பங்கள் தோட்டம் சார்ந்துள்ள பகுதிகளில் செல்கிறது. இதில் செடிகள் அபரிதமாக வளர்ந்து மின் பாதைகளில் உள்ள கம்பங்களில் பற்றி மின்தடைக்கு காரணமாக உள்ளது. மின் கம்பங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கட்டுவது, வேலி அமைப்பது உள்ளிட்டவை பரவலாக உள்ளது. இது போன்ற இடையூறுகளால் அவ்வப்போது மின்னழுத்த குறைபாடுகளால் மின் சாதனங்கள் பழுதாவதும், கால்நடைகள், மனித உயிர்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. மலைப்பகுதி சார்ந்த மின் பாதைகளில் இது போன்ற இடையூறுகள் ஏராளமாக உள்ளன. மாதம்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு உதவி மின் பொறியாளர் அலுவலகங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இருந்த போதும் மின்பணியாளர்கள் இவற்றை கண்டு கொள்ளாது வெறுமனே விட்டு விடுகின்றனர். இது போன்ற அலட்சியங்களால் மனித உயிர்களும், மின் சாதனங்களும் பாழாகின்றன. கிராம பகுதிகளுக்கு செல்லும் மின் பாதைகளில் படுமோசமான இடையூறுகளை காணும் சூழல் உள்ளது. மின்வாரியத்தனர் அலட்சியப்போக்கோடு கையாளாமல் மாதம்தோறும் மின்பாதைகளில் படரும் கொடிகளை அகற்றி பாதுகாப்பான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.