வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தெற்குதெரு லட்சுமி விநாயகர், கருப்பண்ணசுவாமி, மாரியம்மன் கோயில்களுக்கு புதிய கோபுரங்கள் கட்டப்பட்டது. இதையொட்டி லட்சுமி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து நேற்று புனித நீர் குடம் கோயிலை சுற்றி வலம் வர கோபுர கலசங்களுக்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்க தீபாராதனை, அபிஷேகம் நடந்தன. ஏற்பாடுகளை கல்யாண சுந்தரம், முத்துப்பாண்டி, முத்துராமலிங்கம், பாண்டி உள்ளிட்ட திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.பேரூராட்சி தலைவர் சிதம்பரம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. எரியோடு : பணம் பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், முருகன், துர்க்கையம்மன், கருப்புசுவாமி, முனியப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதற்காக நவ.29ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பெரகம்பி காசி விஸ்வநாதர் கோயில் அர்ச்சகர் மகா சிவ் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் பங்கேற்றனர். கோபால்பட்டி : கே.அய்யாபட்டி விஷ்ணு விநாயகர்,பாப்பாத்தி அம்மன், பால தண்டாயுதபாணி, கருப்பண்ணசுவாமி கோயில்களில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபதி யாகம், மஹா சங்கல்பம், வாஸ்து பிரவேச பலி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.